தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் மற்றும் மக்களவை தொகுதிக்கு தற்போதைக்கு இடைத்தேர்தல் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
திருவெற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கேபிபி சாமி மற்றும் வேலூர் மாவட்ட குடியாத்தம் சட்டமன்ற தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ காத்தவராயன் ஆகியோர் உடல்நலக் குறைவால் கடந்த பிப்ரவரி மாதம் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து. யாரும் எதிர்பார்காத விதமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் காரணமாக திருவொற்றியூர், குடியாத்தம், திருவல்லிக்கேணி ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டன.
இதனிடையே, திமுக கூட்டணியில் இடம்பெற்று காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ வசந்தகுமார் கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், அந்த தொகுதியில் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இத சூழலில் பீகார் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு வாய்ப்பு இல்லை என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. தமிழக தலைமைச் செயலாளர், தலைமை தேர்தல் அதிகாரியின் அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்துவதில் பிரச்சனைகள் இருப்பதாக தலைமைச் செயலாளர், தலைமை தேர்தல் அதிகாரி தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதேபோல், கேரளா, மேற்கு வங்கத்திலும் இடைத்தேர்தல் நடத்தும் சூழல் இல்லை என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.