– அருண் மோகனாப்பிரியன்
எல்லாமே எப்போதோ எங்கேயோ முடிந்துப் போனதுதான். இவ்வளவுக்குப் பிறகும் இத்தனை தூரம் தாண்டி இங்கே வந்திருக்க வேண்டாம்தான். நடப்பது சினிமா இல்லை, நிஜம். வலிகளாலும், காயங்களாலும், கசந்துப் போன காதலாலும் எழுதப்பட்ட நிஜம்.
“இத்தனை நாள் இருந்திருந்து சத்யாவுக்கு இப்போதுப் பார்த்தா கல்யாணம் முடிவாகியிருக்க வேண்டும். அப்படியே முடிவாகியிருந்தாலும், எதற்காக எனக்கு அழைப்பு?… அழைத்தாலும், நான் எதற்கு இங்கு வந்திருக்கிறேன்? உன் முன்னே நான் ஜெயித்துவிட்டேன் என சத்யா காட்டிக்கொள்வதற்காகவா? இல்லை, நம் காதல் மொத்தமாக தோற்றுவிட்டது எனக் கதையின் கடைசி அத்தியாயத்தையும் முடித்து வைப்பதற்காகவா? “You must come Sasi. I want you to be there’’ – இதை எப்படி அனுப்ப முடிந்தது சத்யாவால். வந்த மெசேஜுக்கு பதில் அளிக்காமல் காட்டிய வீம்பை, கல்யாணத்துக்கு வராமல் இருந்தல்லவா காட்டியிருக்க வேண்டும்? ச்சை… ஏன் இந்த ஆணினம் மட்டும் இப்படி மான ரோஷம் இல்லாமல் வாழப் பழகியது? இல்லை நான் மட்டும்தான் விதிவிலக்காக வெட்கமற்றுப் பிறந்துவிட்டேனா?”… தொடர்ந்தெழுந்த சசியின் மன எண்ணங்களுக்கு இடைகாலத் தடைப்போட்டது ஒருகுரல்.
“தம்பி, வாங்வாங்க! எப்போ வந்தீங்கங்? ஏங் கடைசில வந்து உட்காந்துடீங்க? சத்யாகூடப் படிச்ச பசங்க யாரையும் காணோமேன்ட்டு இப்போதானுங் சொல்லிட்டிருந்தேங், உங்கள காலேஜ் அட்மிஷன் அப்போ பாத்தேனல்லங்? சத்யாவோட தாய்மாமாங்க நானு. கைய்யோட சாப்டுவந்திரலாம் வாங், கூடவேறாரும் பசங்க வர்லைங்களாங்?”, பதில் சிரிப்பிற்காய் காத்திருந்தவர்போல சிரித்த முகத்தை மாற்றாமல் சிரித்தவாறே வைத்திருந்தார்.
இத்தனைக் கேள்விகளை எப்படி இவரால் இடைவிடாது கேட்க முடிகிறது… இதில் எந்தக் கேள்விக்கு முதலில் பதில் சொல்வது? சொன்னாலும் எப்படி அத்தனை வார்த்தையிலும் ‘ங்க’ சேர்ப்பது?. “எங்க ஊர்ல பேசற தமிழ்தான்டா மரியாதையான தமிழ் தெரிஞ்சுக்க”, என சத்யா எப்போதோ ஒருமுறை சொன்னதற்கு இப்போது கோவம் வந்தது.
“ஆ…, ஆமாங்க. நான் கொஞ்சம் முன்னாடியே வந்துட்டேன். மத்தப் பசங்க எல்லாம் வந்துட்டு இருக்காங்க. எல்லாரும் வந்ததும் சேர்ந்து சாப்பிட்டுக்குறேன்”, கஷ்டப்பட்டு சிரித்து வைத்தான். அவர் சரி சொல்லி, அடுத்த ஆளை உபசரிக்க நகர்வதற்கும் கணேஷ், விக்கி, பாரதி வருவதற்கும் சரியாக இருந்தது. பரஸ்பர மாமன், மச்சான் நட்புரையாடல்களுக்குப் பின் வந்திருந்தக் கூட்டத்தில் கண்களை விரித்தனர் மூவரும்.
சசி எதிலும் ஆர்வம் இல்லாதவனாய் மேடையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். கணேஷ் திடீரென சசியின் மெளனத்தை கலைக்கும்படியாக, “நீ மட்டும் ஏன்டா சென்னைலேர்ந்து பைக்ல வந்த?” என்றான். இந்தக் கேள்விக்கான பதிலை ஏற்கனவே தயாராக வைத்திருந்தவனாய், “ஒன்னுமில்ல மச்சான் பைக்ல சோலோ ட்ரிப் போய் ரொம்ப நாள் ஆச்சுல்ல, அதான் சும்மா அப்டியே”, எனக் கண்ணடித்தான்.
“அட லூசுப்பயலே” என்றபடி மற்ற இருவருடன் அரட்டையைத் தொடர்ந்தான் கணேஷ். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் மாப்பிள்ளை-பெண் சகிதமாக மேடையேறினர். அத்தனைக் கூட்டத்தில் சத்யாவின் கண்கள் தன்னைத் தேடுமா என்ற நப்பாசையும் எழுந்தது சசிக்கு.
சசி-சத்யா விஷயம் அவர்கள் இருவரைத் தவிர வேறுயாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இருவருமே இதுபற்றி ஆச்சரியப்பட்டதும் உண்டு, “எப்படி நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் இப்படி மக்கா இருக்கானுங்க, ஒருதடவக் கூடவா நம்ம மேல இவனுங்களுக்கு சந்தேகம் வரல?” என ஒருமுறை சத்யா கேட்டப்போது, “எல்லாத்துக்கும் தெரியும்போது தெரியும்… அவங்க மக்கா இல்ல நம்ம மக்கானு” என்றான் சசி.
மேடையில் சுற்றியிருந்த இருவீட்டு சொந்தங்களின் முகத்திலும் அத்தனை சந்தோஷமும், சிரிப்பும் வழிவதைப் பார்க்க சசிக்கு என்னவோ போல் ஆனது. இத்தனைப் பேரின் மகிழ்ச்சியைப் பார்த்து எனக்கு ஏன் சோகம் வரவேண்டும். இவர்களில் யார் மீதும் தவறிருப்பதாய் தெரியவில்லை. அவரவருக்கு அவரவர் நியாயங்கள், தர்மங்கள். என் காதல் கைக்கூடாததற்கு இவர்களைக் காரணம்காட்டி எதுவும் ஆகப்போவதில்லை. காதலுக்காக துணிந்து அப்படி என்ன பெரிய தியாகத்தை செய்துவிட்டோம் இருவரும். சாதி, குடும்பம், கெளரவம், கலாச்சாரம், பண்பாடு எனக் காலங்காலமாய் புரையேறிப்போன ஒரு சமூகத்தில் வெளித்தெரியாமல் செத்துப்போன எத்தனையோ காதல்களில், எங்களுடையதையும் சேர்த்துக்கொண்டதைத் தவிர. இப்போது யோசித்தால் தான்தான் மக்கென்று பட்டது சசிக்கு.
மண்டபத்திலிருந்து வெளியே வந்து பார்க்கிங்கில் தன் பைக்கின் மீது அமர்ந்தவாறே சிகரெட்டைப் பற்ற வைத்தான். சற்று தூரத்தில் யாரோ இருவர் பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டது. அந்தப் பெண்ணை இதற்கு முன் பார்த்திருக்கிறான். சத்யாவின் உறவுக்காரப் பெண். பெயர் ‘இந்து’வோ என்னவோ. அவளுடன் பேசிக்கொண்டிருந்த பையனின் சட்டையெல்லாம் வேர்வையில் நனைந்திருந்தது. ஒருவித படப்படப்புடன் இருந்தான். காதலனாய் இருக்கக்கூடும். சசியின் சிகரெட் முடிவதற்குள் அந்தப் பெண் அங்கிருந்து நகர்ந்துவிட்டாள். கூட இருந்தவன் மண்டபத்திற்குள் போகிறவனாய் தெரியவில்லை. “அடுத்த விக்கெட் நீதான்டா தம்பி”, என நினைத்துக்கொண்டான்.
சசியைத் தேடி கணேஷ் வெளியே வந்தான், “என்னடா சாப்ட்ற ஐடியா இருக்கா இல்லையா? அங்க அவனுங்க ரெண்டு பேரும் ஆரம்பிச்சு புயல் வேகத்துல போயிக்கிட்டு இருக்கானுங்க, இப்பவே போனாதான் மிச்சம் மீதி ஏதாவது கெடைக்கும் கெளம்பு”, என்றான்.
ஒரு நிமிடம் கணேஷிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடலாமா எனத் தோன்றியது சசிக்கு. இனிச் சொல்லி மட்டும் என்ன ஆகப் போகிறது என்ற எண்ணமும் கூடவே தோன்றவே, “போலாம் மச்சான் வா” என கணேஷுடன் மண்டபத்தை நோக்கி நகர்ந்தான்.
காலையில் ப்ரம்மமுகூர்த்தத்தில் கல்யாணம். இன்னும் 5-லிருந்து 6 மணிநேரம். அதையும் பார்த்துவிட்டுத்தான் போக வேண்டுமா?, என்னச் சொல்லி, யாரிடம் பேசி இந்தத் திருமணத்தை நிறுத்துவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன? வீட்டில் அப்பா அம்மா? அக்கா? சத்யாவின் அப்பா? சத்யாவின் தாய் மாமா, ரிசெப்ஷனில் கூட அழகாகப் பேசினாரே!, ஒருவேளை நிஜத்தில் டெரராக இருந்தால்? சத்யாவின் தம்பி?, நல்ல பையன் அவனைப் பிடித்தால் ஏதாவது வாய்ப்பிருக்கும். இல்லை கடைசியாக ஒருமுறை சத்யாவிடமே பேசிப் பார்த்துவிடலாம். இவ்வளவு தூரம் வந்ததற்கு ஏதேனும் அர்த்தம் இருக்க வேண்டும். இன்னுமொரு பத்து வருடங்கழித்து ஏன் இதை அன்றைக்கே செய்யவில்லை என நினைத்து வருத்தப்பட்டு பிரோயஜனமில்லை.
ஹோட்டல் ரூம் பால்கனியில் இத்தனையும் யோசிப்பதற்குள், அரைப் பாக்கெட் சிகரெட்டைத் தீர்த்திருந்தான் சசி. ரூமில் கணேஷ் தவிர இருவரும் மட்டை. “மச்சான் மண்டபம் வரைக்கும் வரியா? சத்யாவப் பாக்கணும்” என்றான் கணேஷிடம். “ஆங்? டேய் மணியப்பாத்தியா? அங்கக் காலைல முகூர்த்தம் வரைக்கும் 1008 சடங்கு இருக்கும்போல. இந்நேரத்துக்கு அங்க எதுக்குடா? ஒரு பீர் இருக்குக் குடிச்சிட்டு மூடிட்டு படு வா”. கணேஷும் நிதானத்தில் இல்லை எனத் தெரிந்தது. இதற்குமேல் அவனை வற்புறுத்தி அழைத்துப்போனாலும் பயனில்லை. “சரிடா நீ தூங்கு நான் பைக்க வெளிலயே விட்டுட்டேன்… ஹோட்டல் பார்கிங்ல மாத்திவிட்டு வந்துட்ரேன்” எனச் சொல்லி நகர்ந்தான்.
மணி 2.30. மாலையில் இருந்தக் கூட்டத்தில் பாதிக் கூட இப்போது இல்லை. தயங்கியவாறே மண்டபத்தினுள் நுழைந்தான். காட்சிகள் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தன. ஆளுக்கொரு பக்கமாய் கூடிக்கூடி ஏதோ பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தனர். எல்லோர் முகத்திலும் ஒருவித பயமும், கோவமும், வெறுப்பும் வெளிப்பட்டதை சசியால் புரிந்துக்கொள்ள முடிந்தது.
அடுத்து என்ன செய்வது எனப் புரியாமல் மண்டபத்தை சுற்றிலும் பார்வையை சிதறவிட்டான். சத்யா மண்டபத்தில் இல்லை. மாலையில் அவன் பார்க்கிங்கில் பார்த்தப் பெண், மண்டபத்தின் ஒரு ஓரத்தில் யாருடனும் கலக்காமல் தனியே நின்றுக்கொண்டிருந்தாள். என்ன நடக்கிறது என்பதை அறியாதவனாய் மறுபடியும் பார்க்கிங்கை நோக்கி வந்தான். அவனது பைக்கின் அருகே சத்யா. பக்கத்தில் வேறு யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. இவன் வருகைக்காகவே சத்யா நின்றிருந்ததுபோல இருந்தது. தயங்கி அருகில் வந்தான்.
“என்னாச்சு? ஏன் எல்லாரும் ஒரு மாதிரி அப்செட்டா இருக்காங்க சத்யா?”
“உள்ளப் பார்த்தா தெரியலையா உனக்கு? கல்யாணம் நின்னுருச்சு கெளம்புப் போலாம்”
“ஏன்? ஏதாவது பிரச்சனையா?”
“ஆமா. பொண்ணு ஓடிப்போனா கல்யாணம் நின்னுபோய்ருமாம். இப்போ நீ வண்டி எடுக்கறியா இல்லையா?”
“விளையாடாத சத்யா. இப்படி முடிவு எடுக்கிறதா இருந்தா எப்பவோ எடுத்துருக்கலாமே… இப்ப எதுக்கு? சுத்திப்பாரு, கொறஞ்சது 400,500 பேரு இருப்பானுங்க உங்க ஆளுங்க.. அடி வாங்கி சாகச் சொல்றியா”
“இங்கப்பார், ஒரு தடவ அவங்களுக்காக யோசிச்சு நம்ம வாழ்க்கைய விட்டுக்கொடுத்தாச்சு. இப்போ இது நமக்கு கெடச்சுருக்குற இன்னொரு சான்ஸ், நான் நல்லா யோசிச்சுத்தான் சொல்றேன், கெளம்புப் போலாம்”
சசி, சத்யாவின் கண்களைப் பார்த்தான். எவ்வித தயக்கமோ, பயமோ அந்தக் கண்களில் இல்லை எனத் தீர்க்கமாகத் தெரிந்தது. வருவதைப் பார்த்துக் கொள்ளலாம் என்கிற முடிவுடன் சத்யாவுடன் கிளம்பினான். விடிவதற்கு இன்னும் நேரம் இருந்தது. மண்டபத்தில் இருந்து கிளம்பியதிலிருந்து இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
ஊரைத்தாண்டிய கொஞ்ச நேரத்துக்கெல்லாம் சத்யாவின் ஃபோனுக்கு வந்த அம்மாவின் அழைப்பு, இருவருக்கும் இடையிலான அமைதியைக் கலைத்தது. சசி வண்டியை ஓரம் கட்டினான்.
“எங்கப் போய்ட்ட சத்யா? கல்யாணமே வேணாம்னு இருந்தப் புள்ளைய, அப்பாக்கு உடம்பு சரியில்லேனு நானா வம்படியா சம்மதிக்கவச்சு, இப்படி உன்ன சங்கடத்துல தள்ளிட்டேனே! சொந்தம் விட்டுறக்கூடாது, தம்பி பொண்ணுதானனு நம்பி எல்லாத்தையும் பண்ணேனே, இப்படிப் பண்ணிட்டாளே! அவத் தங்கச்சி இந்துவும் கூட இருந்துதான் அனுப்பிவச்சுருக்காயா, பாவிமக”, அம்மா அழுது அழுது ஓய்ந்திருந்தாள்.
“விடுமா, எனக்குப் பெருசா ஒண்ணும் வருத்தமெல்லாம் இல்ல. விட்டுருங்க. மாமாக்கிட்டயும் எதுவும் தப்பாப் பண்ண வேண்டாம்னு சொல்லுமா. ஒரு பொண்ணா அவளோட முடிவ அவளே தைரியமா எடுத்துருக்கா, நல்லதுதான்”
“நீ எங்க இருக்க சத்யா?”
“நானும் என்னோட முடிவ இப்போதான்மா எடுத்துருக்கேன். என்ன, அவ அவளோட முடிவ ஊருக்கே சொல்லிட்டா… என்னால அது முடியல, அவ்ளோதான் வித்தியாசம். கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாகும்மா, நீங்க உடம்பப் பாத்துக்கோங்க” அம்மாவின் பதிலுக்கு காத்திராமல் ஃபோனை அணைத்துவிட்டு, சசியின் தோள்களை அழுத்தி, “எட்றா, போலாம்” என்றான் சத்யா.
நீண்ட நாட்களுக்குப் பிறகான சத்யாவுடனான இந்த நெருக்கம் என்னவோ செய்ய, அன்றைய விடியல் அவர்களுக்கானதாய் விடிந்ததாய், வண்டியை இன்னும் வேகமாக முறுக்கினான் சசி.
– கதைப் படிக்கலாம் – 95
இதையும் படியுங்கள் : வேடிக்கையான மனிதர்கள்