புதுவையின் அடையாளங்களில் ஒன்றாகிய பாரதி மற்றும் சுதேசி பஞ்சாலைகள் நாளை முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் மற்றும் மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
பஞ்சாலைகள்
புதுவையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக ஏ.எப்.டி., பாரதி, சுதேசி ஆகிய பஞ்சாலைகள் செயல்பட்டு வந்தன. இந்த 3 ஆலைகளிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக இந்த ஆலைகள் நஷ்டத்தில் இயங்கத் தொடங்கின. இதனை மீண்டும் சீரமைத்து இயக்க பல்வேறு முயற்சிகளை எடுப்பதாக அரசுகள் தெரிவித்தன. இதற்காக மத்திய அரசிடம் நிதி பெறவும் முயற்சித்தனர். ஆனால், மத்திய அரசிடம் இருந்து போதிய நிதி கிடைக்கவில்லை. தொடர்ந்து, ஆயத்த ஆடை பூங்காவாக மாற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அதற்கான நிதிகளை ஒதுக்கப்படவில்லை. புதிதாக ஆட்களை வேலைக்கு எடுக்காததால் பணியாட்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்தது. பலர் விருப்ப ஓய்வு பெற்று வெளியேறினர்.
நஷ்டம்
3 வேளைகளிலும் இயங்கிய இந்த ஆலைகள் பெயரளவில் இயங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்த மூன்று ஆலைகளையும் இணைத்து புதுவை பஞ்சாலைக்கழகம் என மாற்றமும் செய்தனர்.
கடந்த சில மாதத்திற்கு முன்பு ஏ.எப்.டி. ஆலை மூடப்பட்டது. இந்த நிலையில் மீதமிருந்த பாரதி, சுதேசி மில்கள் மிகக்குறைந்த அளவிலான தொழிலாளர்களுடன் மட்டுமே இயக்கப்பட்டது. தற்போது இந்த ஆலைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மேலாண் இயக்குநர் பிரியதர்ஷினி வெளியி்ட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
நாளை முதல் மூடல்
சுதேசி, பாரதி ஜவுளி ஆலையின் கீழ் இயங்கும் ஸ்ரீபாரதி ஆலை மற்றும் சுதேசி காட்டன் ஆலை ஆகிய 2 ஆலைகளையும் அரசின் உத்தரவுப்படி தொழில் தகராறுகள் சட்டம் 1947 பிரிவு 25(0)-படி 30.9.2020 ஆம் தேதியுடன் மூடப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுவையின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்த இந்த மூன்று பஞ்சாலைகளும் மூடப்பட்டது அதில் பணியாற்றியவர்கள் மட்டுமின்றி அப்பகுதி மக்களுக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.