உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக C.B.I.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமாபாரதி உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டி CBI போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
இதில் 17 பேர் இறந்து விட்டதால், மீதி 32 பேர் மீது உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள CBI கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. இறுதி தீர்ப்பு இந்த வழக்கில் இன்று வழங்கப்படுகிறது.
இந்த தீர்ப்பையொட்டி நாடு முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்று கருதி, அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் டி.ஜி.பி. திரிபாதி இது தொடர்பான எச்சரிக்கை தகவலை அனுப்பி உள்ளார். சென்னையில் முக்கியமான இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுவார்கள் என்றும், போலீஸ் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்படும் என்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.