– தமிழ்ச்செல்வன்
ஓடும் பேருந்தில் ஒரு இளைஞன் கண்ணீர்விட்டுக் கொண்டிருந்தான். கைக்குட்டையால் துடைத்தான். மீண்டும் கண்ணீர் வடிந்து, அவன் கன்னங்களை நனைத்தது. பொது இடத்தில் ஒரு ஆண் அழுவது அபூர்வ நிகழ்வு. ஒரு சிலர் கவனித்து அனுதாபம் கொண்டார்கள்.
இளைஞனின் பெயர் வசந்தன். வயது சுமார் 25. அது காஞ்சிபுரத்தில் இருந்து கோயம்பேடு செல்லும் பேருந்து. அவன் சோகத்திற்கு நடுவே ஒரு பெரியவரைப் பார்த்துக்கொண்டே இருந்தான். அவரும் இவனைக் கவனித்தார்.
அவரது பக்கத்து சீட் காலியானது. அருகில் சென்று அமர்ந்துக் கொண்டான். அவரே பேச்சை ஆரம்பித்தார்.
“தம்பி ஏதாவது பிரச்சனையா?”
“அப்பா ஞாபகம் வந்துடுச்சு”
“அவருக்கு என்ன ஆச்சு”
“5 வருஷம் முன்னாடி இறந்துட்டாரு. நீங்க அப்படியே எங்க அப்பா மாதிரியே இருக்கீங்க. நீங்க திடீர்னு என்னைப் பார்த்து, டேய் சின்னா, நான் சாகலைடா, திரும்பவந்துட்டேன் பாருனு சொல்லுவீங்கனு எதிர்பார்த்தேன். உங்கக் குரல் மட்டும்தான் வித்தியாசம். மத்தப்படி அப்படியே எங்க அப்பா மாதிரியே இருக்கீங்க”
“உன்னோட பேர் என்ன சொன்ன?”
“வசந்தன், அப்பா என்ன சின்னானு கூப்பிடுவாரு. அப்பா பேரு ஆறுமுகம். உங்கப் பேர் என்ன?”
“இம்மானுவேல். நானும் உன்னை சின்னானு கூப்பிடலாமா?”
“நான் உங்களை அப்பான்னு கூப்பிடவா?”
“தாராளமா கூப்பிடு சின்னா”
“என்னால இன்னும் நம்பவே முடியலைப்பா. ஆச்சரியமா இருக்கு. எப்படி ஒரே மாதிரி இன்னொருத்தர் இருக்கமுடியும்”
“இது மாதிரி பல பேருக்கு நடந்திருக்கு சின்னா. சம்பந்தம் இல்லாத 2 பேர் ஒரே மாதிரி இருக்கறதை, இங்கிலீஷிலே Doppleganger-னு அதாவது டாப்பில்கேங்கர்னு சொல்லுவாங்க.
இப்போ, உனக்கும் முன்னாடி சீட்ல இருக்குறவருக்கும் சாயல்ல 10% ஒற்றுமை இருக்கும். இன்னொருத்தர் கூட 20% இருக்கும். ஒருவேளை யாரோ ஒருத்தர் உன்னோட சாயல்ல 80% இருந்தா, நீங்க 2 பேரும் ஒரே ஆள்னு மத்தவங்க நினைச்சுப்பாங்க. இதான் விஷயம். நான் உங்க அப்பா மாதிரி 80% இருக்கலாம். கூர்ந்துப் பார்த்தா வித்தியாசம் தெரியும்”
“அப்பா, நீங்க ஒரு நாள் எங்க வீட்டுக்கு வரணும். அம்மா உங்களை பார்த்தா ரொம்ப ஆச்சரியப்படுவாங்க.”
“சரி சின்னா, ஒரு நாள் வரேன்”
“எங்க அப்பா துபாய்ல வேலை செஞ்சாரு. எப்போவாதுதான் லீவ்ல வருவாரு. எனக்குச் சின்ன வயசுல இருந்தே சில ஆசைங்க இருந்துச்சு, அப்பா விரல்புடிச்சு நடக்கணும். அவர் கூட சேர்ந்து ஓட்டல் போயி சாப்பிடணும். அப்பா என்னை ஒருதடவையாவது கோபமா திட்டணும். நானும் அவரும் மட்டும் சேர்ந்து ஃபோட்டோ எடுக்கணும் இந்த மாதிரி”
“அவர் லீவ்ல வந்தப்போ, இது எல்லாம் நீ பண்ணலியா?”
“நான் குழந்தையா இருக்கும்போது, அவர் மேல ஒரு பயம் இருந்துச்சு. வளர்ந்ததும் பயம் போயிடுச்சு. ஆனா இதைக் கேக்கறதுக்கு ஒரு தயக்கம். நான் பேசணும்னு நினைக்கிறத எல்லாம் ஒரு டயரில லெட்டர் மாதிரி எழுதி வச்சுடுவேன். அன்புள்ள அப்பாவுக்குனு ஆரம்பிச்சு, மனசுல தோன்றத எல்லாம் வெட்கத்தை விட்டு எழுதுவேன். கடைசி வரைக்கும் ஒன்னுக்கூட அவர் கிட்ட காமிக்கவே இல்லை”
“ஏன் சின்னா”
“அந்த தயக்கம்தான். என் படிப்பு முடிஞ்சதும், நம்ம ஊருக்கே வந்து ஒரு மளிகைக்கடை வச்சி, ஒண்ணா இருப்போம்னு சொன்னாரு. நான் படிச்சு முடிச்சேன்… வேலைக்குச் சேர்ந்தேன். முதல் சம்பளத்துல அவருக்கும், அம்மாவுக்கும் டிரஸ் வாங்கி வச்சிருந்தேன். ஒருநாள் அவங்க கம்பெனில இருந்து ஃபோன் வந்துச்சு ஒரு தீவிபத்துல அப்பாவும் கூட இருந்தவங்களும் மொத்தமா எரிஞ்சு.. அப்பாவோட.. அப்பாவை கொண்டு வரவும் முடியல, முகத்தையும் பார்க்க முடியல. எல்லாம் அங்கேயே முடிச்சுட்டு எங்களுக்கு தகவல் மட்டும்தான் சொன்னாங்க”
“சரி சின்னா… மனசை தேத்திக்கோ. நம்ம கையில என்ன இருக்கு”
“அவர் இறந்துட்டாருனு என்னால இன்னும் நம்பமுடியல. ஏதோ ஒரு ஊர்ல அவர் வாழ்ந்துட்டு இருக்காரு. ஒரு நாள் எங்க முன்னாடி வந்து நிப்பாருனு நம்பிட்டு இருக்கேன். இப்பவும் அவருக்கு டயரில லெட்டர் எழுதிட்டு இருக்கேன்”
“கவலையேப்படாதே சின்னா. நானே ஒரு நாள் வந்து உன்னோட லெட்டர் எல்லாம் படிக்கிறேன்… ஒரு நாள் முழுக்க உன் கூடவே இருக்கேன் சரியா”
அவர்கள் ஃபோன் நம்பர்களைப் பகிர்ந்துக்கொண்டார்கள். வசந்த் நிறையப் பேசினான். சந்தோசமாக அவர் விரல்களைப் பிடித்தப்படியே இருந்தான்.
அவர் பூந்தமல்லியில் இறங்கிக்கொண்டார். வீடு வந்ததும் வசந்த் தன் அம்மாவிடம் எதுவும் சொல்லவில்லை. வழக்கம் போல் தன் டயரியில் லெட்டர் எழுதத் தொடங்கினான். ஃபோட்டோவில் சிரித்துக்கொண்டிருக்கும் தன் அப்பாவைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.
ஒரு வெள்ளிக்கிழமை அவருக்கு ஃபோன் பேசினான்.
“இந்த ஞாயித்துக்கிழமை வீட்டுக்கு வர முடியுமா? அன்னைக்கு என் கூட இருப்பீங்களா?”
“வேணும்னா சனிக்கிழமை வரட்டுமா? ஞாயித்துக்கிழமை சர்ச் போற நாள். அங்கப் போனாதான் அந்த வாரத்துக்கான எனர்ஜி கிடைக்கும். பரவாயில்லைப்பா ஞாயித்துக்கிழமை கூடப் பிரச்சனை இல்ல. எப்போ வரணும் சொல்லு வரேன்”
“சரிப்பா, நீங்க சனிக்கிழமையே வாங்க. நாளைக்கு தானே சனிக்கிழமை. உங்களை சீக்கிரம் பாக்க முடிஞ்சா எனக்கு சந்தோஷம்தான். காலையில வாங்கப்பா. நான் ரெடியா இருப்பேன். அம்மாக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்,”
“அவங்க ஒன்னும் ஹார்ட் பேஷன்ட் இல்லியே. சர்ப்ரைஸ் எல்லாம் கொடுக்கலாமா ?”
“அது எல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லப்பா. நீங்க வாங்க”.
சனிக்கிழமை சீக்கிரம் எழுந்துக்கொண்டான். உடை மாற்றி தயாராக இருந்தான்.
“அம்மா, இன்னிக்கு அப்பாக்கு புடிச்ச ஆப்பம், தேங்காய்ப்பால் செய்யறீங்களா?”
“உனக்கு அது புடிக்காதுனு சொல்லுவியேடா?”
“இன்னிக்கு சாப்பிடணும்னு தோணுதுமா”
அன்று காலை காலிங்பெல் சத்தம் கேட்டது. வசந்த் ஏதோ தேடுவது போல் பாவலா செய்தான்.
“காலிங்பெல் அடிக்குது. கதவை திறந்து பாருடா”
“வேலையா இருக்கேன்மா. நீங்களே திறந்துப் பாருங்க”
வசந்த் தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்தான்.
அம்மா கதவைத் திறந்துப் பார்த்தார். சில நொடிகள் ஸ்தம்பித்து மௌனமாக இருந்தார்கள்.
“என்னோட பேர் இம்மானுவேல். வசந்தனை பார்க்க வந்தேன்.”
“உள்ளே வாங்கப்பா. ஆமாம்மா, 3 நாள் முன்னாடி பஸ்ல பார்த்தேன். அப்பா மாதிரியே இருந்தாரு.”
“நானும் டக்குனு அப்பாதான் வந்துட்டாரோன்னு நினைச்சேன். அப்புறம்தான் வேற ஒருத்தருனு புரிஞ்சுது”
அன்று காலை சேர்ந்துச் சாப்பிட்டார்கள். வசந்த் முதல் சம்பளத்தில் வாங்கிய உடையை அவருக்குக் கொடுத்தான். அவன் எழுதிய டயரி ஒன்றைக் கேட்டு வாங்கிக்கொண்டார்.
இருவரும் வெளியில் சென்றார்கள். அவரின் கைபிடித்து நடந்தான்.
“சேர்ந்து ஃபோட்டோ எடுத்துக்கலாமா?”
“ஸ்டூடியோ போகலாம்பா. என் ஃபிரென்ட்தான் வச்சிருக்கான்”
ஸ்டுடியோ சென்றார்கள்.
“ஹெலோ ஸ்ரீராம்”
“வாடா வசந்த், எப்படி இருக்கே. அங்கிள் நீங்களா?”
“எங்க அப்பா மாதிரியே இருக்காருல. ஆனா அவர் இல்லடா”
“சாரிடா, நான் குழம்பிட்டேன்”
“ஒரு ஃபோட்டோ எடுடா,ரெண்டு பேரையும் சேர்த்து”
“எடுக்குறேன். நீங்க ரெடி ஆயுடுங்க”
“சட்டை பேக்கெட்ல இந்த ஹீரோ பேனா வச்சுக்கோங்க. எங்க அப்பா எப்பவுமே வச்சிருப்பாரு”
“சந்தனம், குங்குமம் மட்டும் மிஸ்ஸிங். மத்தப்படி உங்க அப்பாதான்”
“கலர் கரெக்ஷன் பண்ணும்போது, ஒரு காப்பியில சந்தனம் குங்குமம் சேத்துக்கோடா, ஸ்ரீராம்”
“அதை எதுக்கு மிஸ் பண்ணனும். உங்க ஸ்டுடியோல சந்தனம், குங்குமம் இருக்கா தம்பி?”
“இருக்கு சார். இதோ எடுத்துட்டு வரேன்”
“நீயே எனக்கு வச்சிவிடு வசந்த்”
“சரி கேசுவலா நில்லுங்க. சிரிச்சிச்சுட்டே பேசுங்க”. ஸ்ரீராம் பல ஃபோட்டோக்கள் க்ளிக் செய்தான்.
“பக்காவா ஃபிரேம் பண்ணி வீட்ல வந்துக் கொடுக்கறேன்.”
“அவசரமில்லை டைம் எடுத்துப்பண்ணு.”
“சரி தம்பி போயிட்டு வரோம்”
மதியம் ஒரு அசைவ ஹோட்டல் சென்றார்கள். தனி ரூமில் உட்கார்ந்து ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
“நீ சொன்ன ஆசை எல்லாம் நிறைவேறிடுச்சு தானே சின்னா”
“நீங்க என்னை கோபமா திட்டனும்… அது ஒன்னுதான் குறை”
“இவ்வளவு நல்ல பையனா இருக்கியே. உன்னை எப்படிடா திட்டறது ?”
வசந்த் புன்னகைத்தான்.
“இப்போ நீயும் என்னோட மகன் மாதிரியே தோணுதுடா. எனக்கு 4 புள்ளைங்கடா… 2 பசங்க, 2 பொண்ணுங்க. கல்யாணம் முடிஞ்சு தமிழ்நாட்டுக்குள்ளேயே வேற வேற ஊர்ல இருக்காங்க. என்னோட ஒய்ஃப் இறந்து 3 வருஷம் ஆச்சு. இப்போ பூந்தமல்லில தனியாதான் இருக்கேன். கடமை எல்லாம் முடிஞ்சுது. கர்த்தர் எப்போக் கூப்பிடுவாருனு காத்துக்கிட்டு இருக்கேன். போன வருஷம்தான் என் சொத்தை 4 பங்கா பிரிச்சுக்குடுத்தேன்.
உன்னைப் போன வருஷம் பார்த்திருந்தா, 5 பங்கா பிரிச்சுக் கொடுத்திருப்பேன்டா”
“சொத்து எல்லாம் எனக்கு முக்கியம் இல்லப்பா. உங்க அன்பைவிட பெருசு வேற எதுவுமில்லை”
வசந்திற்கு பொறை ஏறி இருமினான். இம்மானுவேல் அவன் தலையில் தட்டினார்.
“அடேய் முட்டாள், பொறுமையா சாப்பிடுடா. தண்ணிக் குடிடா”
“என்னை திட்னதுக்கு தேங்க்ஸ்பா. ரொம்ப சந்தோசமா இருக்கு. எனக்கு இப்போவே செத்துடனும் போல இருக்கு”
“வாயைக் கழுவுடா. இப்படி எல்லாம் பேசி என்கிட்ட திட்டு வாங்கப் பிளானா?. உதை வாங்குவ ராஸ்கல்”
“அப்பா”
“அழாதே. சின்னா”
அன்று மாலை வரை சந்தோசமாகக் கழித்தார்கள்.
“கிளம்பறேன் சின்னா. அடுத்தச் சனிக்கிழமை பூந்தமல்லிக்கு வா.”
“சரிப்பா நிச்சயம் வரேன்”
ஆட்டோ ஏறி விடைபெற்றார்.
புதன்கிழமை ஃபோன் செய்து நிறைய நேரம் பேசினார்கள்.
வெள்ளிக்கிழமை அவர் ஃபோன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
சனிக்கிழமை காலை சீக்கிரம் கிளம்பினான்.
“அம்மா, பூந்தமல்லிக்கு போயிட்டு வரேன்மா. இன்னிக்கு வர சொன்னாரு. நேத்துல இருந்து ஃபோன் வேற ஸ்விட்ச் ஆஃப். நேர்ல போயி பாத்துட்டு வரேன்”
“நைட் சாப்பிட வந்துடுவியா?”
“நைட் அவர் கூடவே சாப்பிடணும்னு சொல்லி இருந்தாரு. சாப்பிட்டு 10 மணிக்கு வரேன்மா. எனக்காக ஒன்னும் பண்ணவேண்டாம். போயிட்டு வரேன்மா”
வசந்த் கிளம்பிச் சென்றான்.
ஆறு மணிக்கு கதவு தட்டப்பட்டது. ஸ்ரீராம் வந்திருந்தான். வசந்தும் இம்மானுவேலும் இருக்கும் ஒரு போட்டோ ஃபிரேமும், மேலும் சில ஃபோட்டோக்களும் கொடுத்துச் சென்றான்.
வசந்த் இரவு எட்டு மணிக்கு வீடு திரும்பினான்.
“என்னடா சின்னா, அதுக்குள்ள வந்துட்ட. என்ன திடீர்னு மொட்டை எல்லாம் போட்டிருக்க. எங்க மொட்டைப் போட்ட”
“சலூன்ல தான் மா. பூந்தமல்லில அப்பா இறந்துட்டாருமா. நேத்தே இறந்திருக்காரு”
“என்னடா சொல்ற. எப்படி திடீர்னு”
“ஹார்ட் அட்டாக்னு சொன்னாங்க. நான் போனப்போ அப்பா கண்ணாடிப்பொட்டிக்குள்ள படுத்திருந்தாருமா. அவரை மரப்பெட்டில வச்சு, அப்படியே மண்ணுப் போட்டு மூடிட்டாங்கமா.”
வசந்த் அழுவதைப் பார்த்து, அம்மாவிற்கும் அழுகை வந்தது.
“இறுதிச்சடங்கு முடிஞ்சதும், சலூன்ல மொட்டை அடிச்சுட்டு பீச்சுல குளிச்சுட்டு வந்தேன். அவர் மகன் ஒருத்தர் நீங்கதான் சின்னாவானு கேட்டாரு. ஆமாம்னு சொன்னேன். ஒரு பார்சல் கொடுத்தாரு. அதுல சின்னாவுக்குனு எழுதி இருந்துச்சு. அப்படியே எடுத்துட்டு வந்துட்டேன்”
வசந்த் குளித்தான். ஸ்ரீராம் கொடுத்திருந்தப் படத்தைச் சுவற்றில் மாட்டினான்.
சின்னாவுக்கு என்று எழுதி இருந்த பார்சலைப் பிரித்தான். அது இன்னொரு ஃபோட்டோ ஃபிரேம்.
அதில் ஒரு கை. அது கடவுளின் கையாக இருக்கக்கூடும். அதன் கீழே ஒரு வாசகம்.
“நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை. உன்னைக் கைவிடுவதும் இல்லை” என்று எழுதப்பட்டிருந்தது.
இந்தப் படத்தையும் அதன் அருகில் மாட்டி வைத்தான்.
அதன்பின் தன் டயரி எடுத்து, அன்புள்ள அப்பாவுக்கு… என்று எழுதத் தொடங்கினான்.
– கதைப் படிக்கலாம் – 104
இதையும் படியுங்கள் : புத்தகத்தின் முதல் பக்கம்…