– வி.ஸ்ரீகாந்த்

25 வயதாகும் ரமேஷ், சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணி புரிகிறான். நிறுவனத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு தனியாக தங்கி இருக்கிறான். மாதம் முப்பதாயிரம் சம்பாதிக்கும் அவன், வீட்டின் கஷ்டம் காரணமாக சிக்கனமாய் வாழ்பவன். சொந்த வீட்டிற்குக் கூட குறைவாகச் செல்பவன்.
வேலை முடித்துவிட்டு, அவன் தங்கி இருக்கும் வீட்டிற்கு செல்வதும், வழக்கமாக நாட்களை கடக்கிறான். வீட்டிலேயே சமைத்து சாப்பிடுபவன் அவன். வீட்டிற்குச் செல்லும் வழியில் சுந்தரி மாவு கடையில் 15 ரூபாய்க்கு மாவு வாங்கி சமைப்பது வழக்கம்.
ஒருநாள் வழக்கமாக வாங்கச் செல்லும் போது கடையில் சுந்தரி அக்கா இல்லாமல், அவளுடைய மகன் கடையில் இருந்தான். அவனும் 25 வயது தக்க ஒருவன். ரமேஷ் மாவு வாங்கப் பத்து ரூபாய் ஒரு நோட்டும், ஐந்து ரூபாயை சில்லறையா கொடுத்தான். அதில் பத்து ரூபாய் நோட்டு கிழிந்து இருந்தது.
சுந்தரி அக்கா மகன், அப்போது அவன் என்ன மனநிலையில் இருந்தானோ, ரமேஷை பார்த்து தீடீரென, “அண்ணா நோட்டு கிழிஞ்சி இருக்கு… அப்படியே தரியே… என்ன என்னனு நினைச்ச” என்று சற்று கோவமாக சொன்னான்.
ரமேஷ் பார்க்காமல் கொடுத்துவிட்டேன் என்று சொல்லி, வேற பத்து ரூபாய் நோட்டை குடுத்துவிட்டு வீட்டிற்கு செல்ல நடந்தான். போகும் வழியில் அவனுக்கு… ஏன் அந்தப் பையன் கோவமாக பேசினான்… தெரியாமதான கொடுத்தேன் என மனக்குழப்பம். அந்தக் கிழிந்த நோட்டை அவனிடம் கொடுத்து விட வேண்டும் என்ற கர்வம் அவனுக்குள்.
மறுநாள் வேலை செய்யும் இடத்தில் வேலை செய்பவர்களிடம் மாவு கடையில் நடந்ததைச் சொன்னான். அதில் ஒருவன் சொன்னான், இங்கு உள்ள காகித நோட்டு அப்படி, கிழிந்த நோட்டாக இருந்தாலும் சீரியல் எண் இருந்தால் வாங்கிக் கொள்வார்களாம். இங்குதான் கிழிந்த நோட்டு செல்லாது என உருவகப்படுத்திவிட்டனர்.
அன்றே ரமேஷ் மாவு கடைக்குப் போனான். சுந்தரி அக்கா பையன் தான் இருந்தான். கூட்டம் கொஞ்சம் இருந்ததால் அந்தக் கிழிந்த நோட்டை தள்ளி விட்டுட்டு கிளம்பிட்டான். கொஞ்ச நேரம் போன பிறகு சுந்தரி அக்கா பையன் அந்தக் கிழிந்த நோட்டைப் பார்த்து, நேத்து வந்தவன் தான் இதை குடுத்திருப்பான் எனவும் இங்கு வரும்போது திருப்பி கொடுத்துவிடலாம் என எண்ணிக்கொண்டான்.
இரு நாள் கழித்து ரமேஷ் கடைக்கு வருவதை கண்ட சுந்தரி அக்கா மகன் சுதாரித்துக்கொண்டான். அன்று ரமேஷ் வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை. அதை நினைவில் கொண்டே வந்துக் கொண்டிருந்தான். ரமேஷ் ஐம்பது ரூபாய் குடுத்து 15 ரூபாய்க்கு மாவு வாங்கினான். அப்போது சுந்தரி மகன் சில்லறை தரும்போது அந்தக் கிழிந்த நோட்டை அவனுக்குத் தள்ளி விட்டான். இதை கவனிக்காமல் வீட்டிற்குச் சென்றவுடன் பணத்தைப் பார்த்தால், அவன் குடுத்த கிழிந்த நோட்டு அவனுக்கே திரும்பி வந்துவிட்டது. சுந்தரி பையன் “அதே கிழிந்த நோட்டை எப்படி குடுத்துவிட்டான் பாரு” என எண்ணி அதை அவனிடமே குடுக்க வேண்டும் என மறுநாள் சென்றான். அந்த நோட்டை குடுத்து விட்டான், மீண்டும் சுந்தரி அக்கா பையன் அதே கிழிந்த நோட்டை பார்த்து அதிர்ந்து விட்டான், ரமேஷுக்கே கொடுத்திட வேண்டும் என அவனுக்கும் கர்வம்.
மறுநாள் ரமேஷ், கடைக்கு வர, அவன் 100 ரூபாய் கொடுக்க, சுந்தரி அக்கா பையன் அதே கிழிந்த நோட்டை கொடுத்தான், ரமேஷ் அவனிடம் “இதோ பாரு கிழிந்த நோட்டை கொடுத்திருக்கிற என கேக்க”, அதற்கு அவன் “நீ கொடுத்த நோட்டு தான் அது என்று சொல்ல”.
ரமேஷ் அவனிடம் “நாம் இருவரும் இந்தக் கிழிந்த நோட்டை செல்லாது என நினைத்து, மாறி மாறி செல்லும்படி செய்து விட்டோம்”. அதனால் மீண்டும் “நான் உன்னிடம் கொடுத்தால், நீ என்னிடமே கொடு” என்றதும். சுந்தரி அக்கா பையன், இந்த யோசனையும் புதுமையா இருக்கு என சம்மதித்தான்.
மாவு வாங்கும் போது ரமேஷும், சுந்தரி அக்கா பையன் மாவை விற்கும் போதும், அந்தக் கிழிந்த பத்து ரூபாய் நோட்டு மாறி மாறி இருவர் கையிலும், செல்லும் நோட்டாக அந்தச் செல்லாத நோட்டு மாறியது. அந்த இருவருக்குள் அந்தக் கிழிந்த நோட்டால் நட்பே உருவாகிவிட்டது. அந்த நோட்டை செல்லும்படி ஆக்கலாம் என அப்போது நினைத்த ரமேஷ், ஒரு கிழிந்த நோட்டு செல்லும்படி ஆக அவரவர் மனசே முக்கியமானது போல, கொஞ்சம் கிழிந்திருந்தாலும், கிழிந்த நோட்டை ஒட்டி இருந்தாலும், அந்த நோட்டை செல்லும்படி ஆக்கலாம் என எண்ணினான். அந்தக் கிழிந்த பத்து ரூபாய் நோட்டு, இன்னும் செல்லும் நோட்டாக உலாவுகிறது.
– கதைப் படிக்கலாம் – 126
இதையும் படியுங்கள் : பால் உணர்வு




