ஒடிசாவில் இந்தியா நடத்திய சவுரியா அதிநவீன அணு ஏவுகணை சோதனை வெற்றி பெற்றிருக்கிறது. இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை ஏந்திக்கொண்டு, ஒலியை விட வேகமாக சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டது.
அணு ஆயுதங்களை ஏந்திக்கொண்டு தரையிலிருந்து புறப்பட்டு 700 கி.மீ. முதல் 1,000 கி.மீ. வரையில் சென்று தரையில் உள்ள எதிரியின் இலக்கை அழிக்கும் வகையில் கே-15 சாகரிகா ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மேம்படுத்தி உள்ளது. இந்த ஏவுகணை சவுரியா என அழைக்கப்படுகிறது. இது ஒலியைவிட வேகமாக செல்லும் என்று கூறப்படுகிறது.
இது 10 மீட்டர் நீளமும், 74 செ.மீ. விட்டமும், 6.2 டன் எடையும் கொண்டதாகும். இதை இயக்குவது எளிது
இந்த ஏவுகணை, ஒடிசா மாநிலத்தில் உள்ள ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தீவில் உள்ள ஏவுதள வளாகத்தில் இருந்து அக்டோபர் 3 ஆம் தேதி மதியம் 12.10 மணிக்கு ஏவி சோதிக்கப்பட்டது.
இந்த ஏவுகணை, வங்காள விரிகுடா கடலில் நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை மிகத்துல்லியமாகவும், வெற்றிகரமாகவும் தாக்கியது. இதனால் இந்த சோதனை வெற்றி கண்டுள்ளதாக டி.ஆர்.டி.ஓ. வட்டாரங்கள் கூறின.
இந்த ஏவுகணையின் பயணத்தின்போது, பல்வேறு டெலிமெட்ரி நிலையங்கள் மற்றும் ரேடார்கள் மூலம் கண்காணிக்கப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சவுரியா அணு ஏவுகணையை, அதன் உயர் செயல்திறன், வழிசெலுத்தல் மற்றும் வழிகாட்டுதல் அமைப்புகள், திறமையான உந்துவிசை அமைப்புகள், அதிநவீன கட்டுப்பாட்டு தொழில் நுட்பங்கள் போன்றவற்றால் உலகின் தலைசிறந்த 10 ஏவுகணைகளில் ஒன்றாக டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர்.
இந்த ஏவுகணையின் மிக முக்கிய அம்சம், இது எதிரிகளால் கண்டுபிடிக்க முடியாத இடங்களில் வைக்க முடியும், செயற்கைக்கோளால்கூட இதை படம் பிடித்து பார்த்து விட முடியாது என்பதாகும்