உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான நிதியை உடனே ஒதுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை:
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான நிதியை உடனே ஒதுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்கள் 3 ஆண்டுகள் தாமதமாக கடந்த ஆண்டுதான் நடத்தப் பட்டன. அதிலும் க புதிதாக பிரித்த 9 மாவட்டங்கள், சென்னை தவிர்த்து 27 மாவட்டங்களில் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் மட்டும் தான் நடத்தப்பட்டன.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்னும் தேர்தல் நடத்தவில்லை. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டாலும் கூட, அதனால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்காதது தான்.
நிதி ஒதுக்க வேண்டும்:
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மாதங்களில் எந்த அளவுக்கு நிதி கிடைத்திருக்க வேண்டுமோ? அதில் பத்தில் ஒரு பங்கு கூட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதற்கான முயற்சியைக் கூட அரசுகள் மேற்கொள்ளவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் மக்களின் தேவைகளை நிறைவேற்றித் தர முடியாத மக்கள் பிரதிநிதிகளாகவே உள்ளனர். . பல கிராமங்களில் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கக் கூட நிதி இல்லாததால், மக்களின் கோபத்துக்கு உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆளாக நேரிடுகிறது. எனவே உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேவையான நிதியை அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




