– எ. மாலதி

அம்மா… களத்து மேட்டில் கதிர்சாய வெளுத்தவளாய் நெற்றியில் வழியும் வியர்வை முத்துக்களைக் கைகளால் வழித்துவிட்டு, தலையில் கட்டியிருந்த பாரதியின் முண்டாசுத் துணியைப் பற்றியிழுத்து முகத்தை துடைத்தாள்…
மாதம் மும்மாரி மழை பொழிந்தால் முப்போகம் விளையும் அறுவடைக்காலத்தில்… மனிதர்கள் மட்டுமல்ல.. பறவைகளும், விலங்குகளும், பூச்சிகளும், வண்டினங்களும் கள்ளுண்ட குரங்கைப் போல் மதிமயங்கி விளையாடும்… வயல் நீரில் மூழ்கி சுரம் பாடும்…
பச்சைப் பசேலென்ற நிலத்தில், மூட்டை மூட்டையாக அறுவடை செய்த காலம் போய், இப்போதெல்லாம் நீரின்றி வறட்சியுற்று பாலம் பாலமாய் வெடிக்க ஆரம்பித்தது..
அம்மாவின் கண்களில் ஆற்றுநீர்ப் பாசனம், கிணற்றுநீர்ப் பாசனம் ஆனதால் ஏக்கம் மெல்லியதாய் இழையோடியதைக் காண முடிந்தது. ஆதில் ஆயிரமாயிரம் கேள்விகணைகள் சமூகத்தைத் துளைத்தெடுத்தன. ஆனால், தன் ஓரே மகனின் எதிர்காலம் மட்டும், அவள் மனதில் எப்போதும் இழையோடிக் கொண்டேயிருந்தது.
எப்படியாவது என்னை மருத்துவராக்கி சொந்த கிராமத்திற்கே சேவை செய்ய வைக்கவேண்டும்.
பசிப்பிணியை நீக்கும் உழவுத் தொழில் எப்படி உன்னதமோ, அதைப் போல மருத்துவத்தையும் கடவுளுக்கு இணையாய் நினைத்தாள் அம்மா…
பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு நெருங்கிக் கொண்டிருந்தது… எனக்கு உள்ளூரப் பயம்… அம்மா நினைத்ததுப் போல எப்படியும் மருத்துவராகி விடவேண்டுமென்ற கனவு என் இரவு உறக்கத்தை மென்று தின்றுவிட்டது… எனவே உறக்கத்திற்கு விடை கொடுத்து உழைப்பிற்கு உயிர் கொடுத்தேன்..
அம்மா எப்போதும் என் நினைவிலேயே மூழ்கியிருப்பவள்.. எனக்காக வாழ்பவள்.. தந்தை இறக்கும் தருவாயில் சரியான மருத்துவ வசதி சொந்த ஊரில் இல்லாததால், ஆருயிர் கணவனை இழந்தவள்… எனவே நானே இரண்டாம் உலகம் அம்மாவுக்கு… அவள் அம்மாவுக்கு… அவள் காணும் உலகத்துள் நான் பிரவேசித்து எப்படியும் சொர்கபுரியாக அதை மாற்ற வேண்டும் என திடமான தீர்மானம் கொண்டேன்..
‘சேகர்.. சேகர்..” அம்மா அழைத்தாள்..
‘என்னம்மா” …
இன்றையிலிருந்து பரீட்சை ஆரம்பிக்கப் போகுது..
நல்லா படிக்கணும்பா.. நாலு பேரு நம்மள பாராட்டுற அளவுக்கு நீ வாழ்க்கையில உயரணும் சரியா… என்று கோடான கோடி தெய்வங்களையெல்லாம் கும்பிட்டு, நெற்றியில் திருநீறு அணிந்தாள்.. உள்ளூர மெய்சிலிர்த்து, மயிர் கூச்செறிந்தது எனக்கு..
எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறாள் அம்மா என்மீது..
அலைபாய்ந்தது மனம் எனக்கு…
சற்றே மனதை ஒருநிலைப்படுத்தி, அம்மாவின் கண்களில் வழியும் கண்ணீர் கோடுகளை துடைத்தெறிந்து..
நான் நிச்சயம் தேர்வில் தேர்ச்சி பெறுவேன் என்று நம்பிக்கைக் கூறினேன். முகத்தில் புன்னகை தெரிந்தாலும், உள்ளுர பயம் அம்மாவிற்கு இருந்ததை என்னால் உணர முடிந்தது…
தேர்வு நாட்களும்.. மரங்கள் பூப்பதும்… உதிர்வதும் போல் இயல்பாக நகர்ந்துவிட்டன…
நான் ஆவலோடு எதிர்பார்த்த தேர்வு முடிவுகள் அறிவிக்கும் காலமும் வந்தது.. நினைத்ததைப் போலவே நல்ல மதிப்பெண்கள்… குறிப்பாக அறிவியல் பாடங்களில் நூற்றுக்கு நூறு…
மாநிலத்திலேயே இரண்டாம் இடம்.. மகிழ்ச்சியில் திளைத்தேன்….
அம்மாவிடம் வேகமாக ஓடி… மதிப்பெண்களைக் காட்ட, அப்படியே என்னைக் கட்டித் தழுவினாள்…
தன் கவலைகள் ஒடுங்கியிருந்த தேகமெல்லாம் பூரித்து மகிழ்ச்சியில் திளைத்தாள்…
அம்மா நினைத்ததைப் போல அரசு மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பித்து மருத்துவமும் பயின்றேன். மிகச் சிறந்த பயிற்சிகளையெல்லாம் பெற்று, மானுடத்தை சரி சமமாகப் பாவிக்கும் உன்னத சமத்துவ மனநிலையோடு, நல்ல மருத்துவராக, பேராசைகளற்ற சேவையுள்ளதோடு தொண்டாற்ற எண்ணி… கல்லூரியை விட்டு வெளியே வந்தேன்…
அப்போது அம்மா என்னிடம், சேகர், வசதி வாய்ப்புகளற்ற ஏழைகளுக்கு சேவை செய்யவே நீ படைக்கப்பட்டிருக்கிறாய்.. எச்சூழ்நிலையிலும்; சுயநலம் தலை தூக்காது பொது நலமே கண்ணாய் கொண்டிரு என்று அறிவுரை கூறினாள். என் கண்களுக்கு அம்மா அன்னை தெரசா போல் காட்சியளித்தாள்.
இப்படிப்பட்ட தாய்வயிற்றில் பிறந்ததற்காகவே பெருமை கொண்டேன் நான்… காலங்கள் உருண்டோடின…
என் கிராமத்து மக்களுக்கும்.. சுற்றியுள்ள பல கிராமங்களுக்கும் மருத்துவம் செய்யத் தொடங்கினேன்.
முதலில் சிறிய அறையை அக்கிராமத்திலேயே வாடகைக்கு எடுத்து, அங்கேயே தங்கி கண்ணுறக்கம் காணாமல் இரவு – பகலாக மருத்துவம் பார்க்கத் தொடங்கினேன்…
டாக்டர் ஐயா நீங்க ரொம்ப கைராசிக்காரருங்க..
நீங்கக் கொடுத்த ஒருவேளை மாத்திரையிலேயே என் தீராத நோயான வயிற்றுவலி காணாமலே போச்சு என்றார் சுந்தரம்…
ம்ம்… நீங்க நன்றியெல்லாம் சொல்லக்கூடாது..
இது என் கடமை…
சொல்லிவிட்டு அங்கிருந்து வேறொருவரை கவனிக்கச் சென்றார் டாக்டர் சேகர்.
பல கட்டில்-மெத்தைகள், தனித்தனியாக பிரித்து போடப்பட்டு, இப்போது இன்னும் கொஞ்சம் பெரிதாக மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்பட்டது.
அவசரமாக வரக்கூடிய எமர்ஜென்சி கேசுகளையும், அறுவை சிகிச்சைகள், இதயம், வயிற்றுப்பகுதி என்று எப்படி எங்கிருந்து நோயாளிகள் தவிப்போடு வந்தாலும், மருத்துவம் இல்லை என்று கூறாமல் இரவு – பகலாக உழைக்க ஆராம்பித்தார் சேகர்.
இப்போது நாட்டிலேயே மிகப்பெரிய இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சேகர் என்று சொல்லுமளவுக்கு உயர்ந்திருந்தார்.
மிகப்பெரிய, சிக்கலான, கடினமான அறுவை சிகிச்சைக் கூட எளிதாகச் செய்து மனிதர்களை பிழைக்க வைத்து பல குடும்பங்களுக்கு தெய்வமாக விளங்கினார்…
பலரும் மனதார பாராட்டி வாழ்த்திச் சென்றனர்…
இவரின் சேவைக்காக மருத்துவ உலகமும் பல விருதுகளை அள்ளி வழங்கியது..
இதையெல்லாம் சேகரின் அம்மா காண முடியாமல் காற்றில் எப்போதோ கரைந்திருந்தாள்…
தீடீரென்று ஒரு வாரமாக மக்கள் முகத்திலும், மனத்திலும் பீதி அப்பிக் கொண்டிருந்தது. சீனாவிலிருந்து கொரானோ தொற்று நோய் பரவிக் கொண்டிருந்ததை மக்கள் முழுமையாக அறிந்துக் கொள்வதற்கு முன், மிக வேகமாக இந்தியாவிலும் பரவ ஆரம்பித்தது…
மக்கள் கூட்டம் அலைமோதும் இடங்களெல்லாம், மனிதத் தடுப்புச் சுவர்களாகக் காவலர்களை அரசாங்கம் நிற்க வைத்து தடை செய்ய முயன்றது…
மருத்துவர்களோ.. இருமலும்… தும்மலுமாய் ஆங்காங்கே சாலைகளில் விழும் கொரானோ பாதித்த மனிதர்களை எல்லாம் விரைவு ஊர்தியில் ஏற்றி சிகிச்சை செய்து உடனே மருத்துவமனைக்கு அழைத்து வந்து மருத்துவம் பார்க்கத் தொடங்கினர்…
அரசாங்கமோ நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக செயல்படுத்தியது..
யாரும் வீட்டைவிட்டு வெளியேராத வண்ணம் தடை உத்தரவுகளைப் பிறப்பித்தது… நோய் வராமல் பாதுகாப்பதற்குரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டிய தகவல்களையும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது…
பல பேருக்கு அச்ச உணர்வே உயிரைப் பறித்திருந்தது.. பல பேர் இதுதான் சுதந்திரமாக சுற்றுவதற்கான நேரம் என்று கருதி சாலைகளில் திரிந்துக்கொண்டிருந்தனர்.
மருத்துவர்கள் அவ்வப்போது அலைபேசியில் வந்து நோய் வராமல் தடுக்க கபசுரக் குடிநீரை நினைவுபடுத்தினர். பலர் பாராம்பரிய நம் தமிழரின் உணவுப் பழக்கங்களையும், நோய்க்கு எதிராக நோய் எதிர்பாற்றல் கூட்டும் சக்தியைப் பற்றியும், நீண்ட சொற்பொழிவை நிகழ்த்திக் கொண்டே இருந்தனர் தொலைக்காட்சியில்…
தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகளையும், பழக்க வழக்கங்களையும் கடைப்பிடித்தாலே போதும், நோய் நம்மை விட்டு நீங்கிவிடும். தனித்திருங்கள்… விழித்திருங்கள்… என்று அறிவுரை கூறினர்.
பல ஆண்டுகளாக குழந்தைகளை குறிவைத்து தாக்கும்.. பல மேல்நாட்டு நிறுவனங்கள், எங்கள் பானங்களை குடித்தால் உயரமாக வளரலாம். குண்டாக செழிப்பாக இருக்கலாம்.. மூளைத்திறன் வளர்ச்சியடையும்.. நோய் எதிர்ப்பாற்றல் கூடும். ஸ்ட்ராங்கர், ஷார்ப்பர், டாலர் என்று கூறி, கூவி பானங்களை விற்ற கம்பெனிகளெல்லாம் நீருக்குள் மூழ்கிய தவளைகள் போல நொடிப்பொழுதில் காணாமல் போய்விட்டன…
தாங்கள் எப்படியெல்லாம் விளம்பரங்களால் இதுநாள் வரை ஏமாற்றப்பட்டிருக்கிறோம்.. என்று மக்கள் யூகிக்கும் பொழுதிலேயே… மருத்துவமனைகளெல்லாம்… காலியாக இயங்க ஆரம்பித்ததை சற்றே அதிர்ச்சியோடே மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்…
அப்போ… வீட்டிலேயே சரிசெய்துக் கொள்ளக் கூடிய சின்ன சின்ன நோய்களுக்காகவோ, இதுநாள் வரை மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தோம் என்று தங்களை தாங்களே சுய விமர்சனம் செய்து-க்கொள்ள ஆரம்பித்தனர்..
இறப்பு விகிதமே நாட்டில் குறையத் தொடங்கியது…
டாக்டர்.. சேகர் மருத்துவமனைக்கு வரக்கூடிய கொரோனா நோயாளிகளுக்கு, முதலில் தன்னம்பிக்கையைக் கொடுத்து மனத்தளவில் முதலில் திடப்படுத்தினார்.
பிறகு ஒவ்வொருவரையும் பரிசோதித்து, அன்னைக்கும் மேலாக அன்புடனும் கனிவுடனும் கவனிக்கத் தொடங்கினார். பிரிந்தக் குடும்பங்கள் எல்லாம் ஒன்றாக இயங்க ஆரம்பித்தன. உறவுகளுக்குள் ஒற்றுமை பெருகியது.. நாட்டில் கொலை.. கொள்ளை… திருட்டு.. தற்கொலையெல்லாம் குறைந்தே… இல்லாமலே போய்விட்டதாக காவல்துறைகள் பகிரங்கமாக தொலைக்காட்சியில் அறிவித்துக் கொண்டிருந்தனர்.
பணம் மட்டுமே வாழ்க்கையென்று ஓடிக் கொண்டிருந்தவர்கள், மகிழ்ச்சியான வாழ்க்கைக்காகத்தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தோன்றியது…
முதன் முதலில் இல்லப்பணிகள் 18 நேரமாக இயங்கிக் கொண்டிருப்பதையும், முழுநேரப் பணியாளர்களாக, தொழிலாளர்களை மீறியும் பெண்ணினம் உழைத்துழைத்து ஒடுங்கிக் கொண்டிருப்பதையும் கண்டது, ஆண் சமூகம்…
குழந்தைகளோ பள்ளிச் சிறைகளிலிருந்து சிறகடித்து சிட்டுக் குருவிகளாக பறந்தனர்..
புத்தகச் சிறைகளிலிருந்து விடுபட்டு, இயற்கையில் நிகழும் அற்புதக் காட்சிகளில் பாடம் படித்துக் கொண்டிருந்தனர்..
கூண்டுக்குள் அடைப்பட்ட விலங்குகளெல்லாம் சுதந்திரமாக வெளியில் நடமாடி, வீட்டிற்குள் சிறைப்பட்டிருக்கும் மனிதர்களைக் கண்டு குதுகலப்பட்டன…
வான்வெளிகளில் வானூர்திகள் எப்போதும் கோடு கிழித்துக் கொண்டேயிருக்கும் நிலைமாறி…
இப்போதெல்லாம் பறவைக் கூட்டங்கள் சிறகடித்து முன்னும், பின்னுமாய் பறந்து இலாவகமாய் தவழ்ந்து – தவழ்ந்து மகிழ்ச்சியாய் பறந்துக் கொண்டிருந்தன…
மனிதன் அழித்த இயற்கையை மீண்டும் காலம் சரிசெய்து கொண்டிருப்பதை உணர்ந்து கொண்டே, தன் இன்னுயிரையும் பொருட்படுத்தாது கொரோனோ நோயாளிகளைக் கவனித்துக் கொண்டிருந்தார், சேகரும் அவரின் நர்சுகளும்…
புனித ஆறுகளும் கங்கா, யமுனா போன்ற ஆறுகளெல்லாம் கழிவு நீர்கள் கலந்து தூய்மை கெட்டிருந்தன…
இப்போதோ அவையெல்லாம் சுத்தமடைந்து, குடிநீராக மாறிக் கொண்டு வருவதைக் கண்டு அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.
கொரோனோ மனிதர்களுக்கு மீண்டும் இயற்கையோடு எப்படி வாழ வேண்டும் என்ற பாடத்தை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது, மனித சமூகத்திற்கு…
அரசாங்கத்திற்கு வருவாயை கூட்டுவதற்காகவே பிறப்பெடுத்த நம் நாட்டின் “குடி” மகன்களோ… இக்கட்டான இச்சூழலிலும் போதைக்காக ஏங்கி மதுக்கடைகளின் முன்பாக தவமிருந்தனர்…
தடைசெய்யப்பட்ட காலமன்றோ… பொருட்களை இப்பொழுதே வலை எலி போல் ஏராளமாக சேமித்துக்கொள்ள மனித மனங்கள் ஓரே இடத்தில் அலைமோத, கொரோனா கட்டுக்கடங்காமல் பரவியது…
டாக்டர் சேகர் நோயாளிகளைச் சந்தித்து மருந்துகள் கொடுத்து முடிந்தப்பிறகு, மருத்துவமனையின் ஒரு வராண்டாவின் வழியாக மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தார்…
பல நோயாளிகளை கொரோனாவிலிருந்து காப்பாற்றி வீட்டுக்கு அனுப்பிவிட்ட பெருமிதம் அவருக்கு.. இருக்கும் மீதிப் பேரையும் எப்படியாவது சுகப்படுத்தி அனுப்பிவிட வேண்டும் என்று திடமான நம்பிக்கை வேறு…
அவ்வப்போது அவரின் தாயின் அறிவுரை வந்து மனக்கண்ணில் நிழலாடும்…
உடனே உற்சாகமாக இந்த 58 வயதிலும் 25 வயது இளைஞரைப்போல் சுறுசுறுப்பாக இயங்குவார;…
அப்படித்தான் அன்றும் வராண்டாவில் நம்பிக்கையோடு நடந்து வந்து தன் அறையிலுள்ள இருக்கையில் வந்து அமர்ந்தார். அப்போது சற்றே தளர்வாக உணர்ந்தார்…
சூடாக தேநீர் அருந்தலாமா என்று நினைத்து வார்டு பாயை அழைத்து வாங்கி வரச் சொன்னார்.
அவனும் விரைவாக வாங்கி வந்துக் கொடுத்தான்….
தன்னை மெதுவாக ஆசுவாசப்படுத்தி தேநீரை அருந்தினார், சேகர்… தன் மனைவி, மகன், மகள் முகம் நிழலாடின கண்களில்…
தீடீரென அவரின் தொண்டைக்குள் ஏதோ கரகரப்பு தெரிய, அவரின் மனக்கண்ணில் பளீரென மின்னல் வெட்டியது. வேகமாக ஆய்வகத்தை நோக்கி ஓடினார்….
தன் தொண்டையிலுள்ள சளியை தானாகவே எடுத்து சுயபரிசோதனை செய்து முடித்தார்…
பரிசோதனையின் முடிவில் அவர் எண்ணியவாறே கொரோனோ – பாசிட்டிவ் ரிசல்ட் காட்டியது. அதிர்ச்சியில் உறைந்தார் சேகர். இருந்தாலும் தளராமல் தன்னம்பிக்கையோடு தன்னைச் சுற்றி நல்ல உறவுகளாக விளங்கும் மருத்துவ நண்பர்கள் இருக்கிறார்களே என்று முழுமையாக நம்பினார்…
உடனே ஒவ்வொருவருக்கும் அலைபேசியில் அழைத்து தனக்கு நேர்ந்ததை விளக்கினார். ஆனால் இதுநாள் வரை இவரிடம் அணுக்கமாக விளங்கிய அனைத்து மருத்துவ நண்பர்களும், இவரிடம் நெருங்கி மருத்துவம் செய்ய வர மறுத்துவிட்டனர். இப்போதுதான் மனிதர்களின் ஒட்டுமொத்த சுயநலத்தையும் உண்மை முகத்தையும் உணரத் தொடங்கினார்.
கருத்த மேகம் சூல் கொண்டு மழையாக நிலத்தில் பொழிந்தப் பிறகு பளிச்சென வெளுக்கும் வானம் போல், அப்பட்டமாய் மனிதர்களின் சுயநலம் வெளிறி வெளியில் வருவதைக் கண்டு மனமுடைந்தார் டாக்டர் சேகர்…
குடும்ப உறுப்பினர்களையோ, காவல்துறை உண்மையறிந்து எப்போதோ தனிமைப்படுத்திவிட்டனர்…
இனி டாக்டர் சேகரால் குடும்ப உறுப்பினர்களின் உதவியையும் பெற முடியாது… உலகமே இருண்டது போல் அவருக்குள் ஓர் உணர்வு தோன்றியது…
தன் இறுதிக்காலம் இப்படியா முடிய வேண்டும் என்று நினைத்துக் கொண்டே, தனக்குத்தானே மருத்துவம் செய்ய முனைந்துக் -கொண்டிருந்தார்.
ஆனாலும், நேரம் ஆக ஆக மூச்சிரைக்க ஆரம்பித்தது அவருக்கு… மூச்சுவிட முடியாமல் அவதிப்பட ஆரம்பித்தார்.
உயிரின் உள்ளொளி கொஞ்சம் கொஞ்சமாக மங்குவதை அவரால் உணர முடிந்தது. எத்தனையோ பேருக்கு தன்னலம் கருதாது உழைத்தே வாழ்க்கையை அர்ப்பணித்தோமே… நமக்கென்று இப்போது யாருமில்லையே என்று அவர் நினைத்தபோது, மனங்கனிந்து கண்களில் விழிநீர் பெருகி கரை புரண்டு ஓட ஆரம்பித்தது…
தான் சம்பாதித்த பணமெல்லாம் வெற்றுக் காகிதங்களாய் காற்றில் பறப்பதாய் கற்பனை செய்துக்கொண்டே தன் அறையில் உள்ள படுக்கையில் சாய்ந்தார்…
இருமி… இருமி… விரைவாக அவரின் இறுதி நிமிடங்கள் மங்க ஆரம்பித்தன… கண்களில் இருள் கவ்வ ஆரம்பித்தது… நாவறண்டு, இறுதியில் மூச்சை காற்றோடு கலந்தார்…
புவியெங்கும் மயான அமைதியைத் தழுவியது…
மனித இனத்துக்காக பேரலை போல் ஓயாமல் உழைத்த உன்னதமான மருத்துவரின் இறுதி மரணம் பெருத்த மன ஓலத்தோடு முடிந்ததைக் கண்டு, காற்றும் ஊளையிட்டு அழுதுகொண்டிருந்தது. ஆங்காங்கே சில மழைத்துளிகளும், மின்னல் ஓளிக்கீற்றுகளும் புறத்தே கண்ணீர் தெளித்து இரங்கற்பா பாடிக் கொண்டிருந்தது.
செய்தியறிந்த காவல்துறை அவர் சேவை செய்த சொந்த கிராமத்திலேயே அவரைப் புதைத்துவிடலாம் என்று நினைத்து, கிராமத்து மக்களிடம் கலந்தாலோசிக்க, ஊரே ஒன்று கூடி அவரை அங்கேப் புதைக்க மறுத்துவிட்டனர். அனைவருக்கும் பெருத்த அதிர்ச்சி… இவ்வளவு நாளா உங்க எல்லாருக்கும் வைத்தியம் பார்த்த டாக்டர் தானே? அவருடைய உடலை புதைக்கக் கூட அனுமதிக்க மாட்டீர்களா, என்று காவல்துறையினர் கேட்க…
அனைவரும் மௌனம் சாதித்துவிட்டனர்…
இந்த மௌனத்திற்கு ‘மறுப்பு” என்று அர்த்தம்…
மனிதம் தொலைந்த மனித சமூகமாக இந்த சமூகம் மாறிப் போய்விட்டதை உணர்ந்து காவலர்கள் பிணத்தை என்ன செய்வதென்று அறியாமல் பிணக்கிடங்கிலேயே போட்டுவிட்டனர்…
ஊர் நலனுக்காக உழைத்துப் போராடிய உத்தமனின் உடல் யாருடைய கண்ணீர் துளிகளையும், இரங்கலையும் எதிர்ப்பார்க்காது, இப்போதும் பிணக்கிடங்கில் தனியாக போராடிக் கொண்டிருந்தது. ஆறடி மண்ணிற்காக காத்துக் கொண்டிருந்தது…
அப்போதும் அவரின் கைகள் மட்டும் இன்னமும் விரிந்த நிலையில் பிறருக்கு உதவுவதற்காகவே இன்னும் காத்துக் கிடந்தது…
இப்போதும் அம்மாவின் குரல் காற்றில் எங்கோ மூலையில் அசரீரீயாய்……. ‘மனிதத்தை தொலைக்காதீர் மனிதர்களே” என்ற ஓலம் கேட்டுக் கொண்டேயிருந்தது…
– கதைப் படிக்கலாம் – 157




