பொது இடத்தில் மாஸ்க் அணியாமல் வந்த தம்பதியிடம், சாதி பெயரை கேட்ட காவலர் காசிராஜனை, ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி.திஷா மிட்டல் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கொரோனா தொற்றுப் பரவலை தடுக்கும்விதமாக, பொதுமக்கள் வெளியே செல்லும்போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. மேலும், விதிகளை மீறி வெளியில் செல்வோரிடம் போலீசார் அபராதம் விதித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் நடராஜன் மற்றும் காவலர் காசிராஜா இருவரும், பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் மாஸ்க் அணியாமல் வந்த சிவக்குமார் மற்றும் அவரது மனைவியை தடுத்து, மாஸ்க் அணியாமல் வந்ததற்காக, அபராதம் விதிப்பதற்காக சிவக்குமாரின் விபரங்களை கேட்டுள்ளனர். அப்போது, சாதி பெயரையும் கேட்டுள்ளார் காவலர் காசிராஜன்.
இதில் ஆத்திரமடைந்த சிவக்குமார், சாலையில் வைத்து சாதி பெயரைக் கேட்டதால், காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், இந்தக் காட்சிகளை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
பொது இடத்தில் மாஸ்க் அணியாமல் சென்ற தம்பதியை, என்ன சாதி என்று காவலர் ஒருவர் கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சாதி பெயர் கேட்ட வீடியோ வைரலாகியதை தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன், இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் காவலர் காசிராஜாவை நேரடி விசாரணைக்கு அழைத்து விசாரித்தார். இந்நிலையில், சாதி பெயரை கேட்ட காவலர் காசிராஜனை, எஸ்.பி.திஷாமிட்டல் ஆயுதப்படைக்கு மாற்றி நடவடிக்கை எடுத்துள்ளார்.