எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பவர்கள் மட்டும் கூட்டணியில் இருக்க முடியும் என்று அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி அதிரடியாக தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வில் சில நாட்களுக்கு முன் எழுந்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கடந்த 7-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமியை கட்சி ஒருமனதாக தேர்வு செய்து முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தது. இது தொண்டர்களிடையே நிலவி வந்தக் குழப்பத்தை நீக்கி, நிம்மதியை தந்தது. ஆனால், தற்போது அடுத்தப் பிரச்சனையாக கூட்டணி முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி பரவலாகி வருகிறது.
அண்மையில் தேர்தல் கூட்டணி குறித்துப் பேசிய பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டது எனவும், வரும் தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க.வுடனோ, தி.மு.க.வுடனோ அல்லது இரண்டும் இல்லாமல் கூட கூட்டணி அமைக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார். மேலும், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க, நெருங்க கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளது என்றும், முதல்வர் வேட்பாளர் யார் என்பது, கூட்டணி உடன்பாட்டிற்கு பின் அறிவிக்க வேண்டிய விஷயம் என்றும் கூறியிருந்தார். இந்தக் கருத்து, அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி இடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தி வந்தது.
மேலும், முதல்வர் பழனிசாமியை சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், அ.தி.மு.க. கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமியா? என்ற கேள்விக்குப் பதில் அளிக்காமல் அங்கிருந்து சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொன். ராதாகிருஷ்ணனின் கருத்துக்கு பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இன்று கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, மாநில கட்சியாக இருந்தாலும் சரி, தேசியக் கட்சியாக இருந்தாலும் சரி, அ.தி.மு.க. முதலமைச்சர் வேட்பாளரை ஏற்றுக்கொண்டால் மட்டுமே கூட்டணியில் இருக்க முடியும் எனவும், ஏற்றுகொள்ளாதவர்கள் நிச்சயம் எங்களுடன் கூட்டணியில் இருக்க முடியாது என்றும் அதிரடியாக பேசியுள்ளார். மேலும், 11 பேர் கொண்ட வழிகாட்டுக் குழுவின் அதிகாரத்தை, கட்சித் தலைமை தான் முடிவு செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.