மனிஷ் பாண்டேவின் அரைசதத்தால் ஹைதராபாத் அணி 158 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணி 159 ரன்கள் இலக்காக வழங்கியது.
ஐ.பி.எல் தொடரின் 26-வது லீக் ஆட்டம் துபாயில் 3.30 மணிக்கு தொடங்கியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.அதனை தொடர்ந்து தொடக்க ஆட்ட வீரர்களாக ஹைதராபாத் அணி சார்பில் பேரிஸ்டவ் மற்றும் கேப்டன் வார்னர் களம் இறங்கி சிறப்பான தொடக்கம் தந்தனர். அடித்து ஆட முற்பட்ட பேரிஸ்டவ்(16 ரன்கள்,19 பந்துகள்) தியாகி வீசிய 5 வது ஓவரில் சஞ்சு சாம்சனின் சிறப்பான கேட்ச்சால் வெளியேற,அடுத்து கேப்டன் வார்னருடன் இணைந்தார் மனிஷ் பாண்டே.
13 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 1 விக்கெட் இழந்து 83 ரன்கள் எடுத்து இருந்தது.இந்த போட்டியிலும் 15 வது ஓவரில் அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் வார்னர்(48 ரன்கள்,38 பந்துகள்) ஆர்ச்சரின் சிறப்பான பந்து வீச்சால் கிளீன் போல்ட் ஆக,அடுத்த ஓவர் வீசிய ராகுல் திவாதியா பந்தில் ஒரு பௌண்டரி,ஒரு சிக்ஸர் மனிஷ் பாண்டே பறக்க விட்டு அசத்தினார்.16 ஓவர்களில் 109 ரன்கள் எடுத்து இருந்தது ஹைதராபாத் அணி.தொடர்ந்து நிலைத்து ஆடிய மனிஷ் பாண்டே 40 பந்துகளில் 50 ரன்களை மிக நீண்ட நாட்களுக்கு பிறகு கடக்க,உனட்கட் வீசிய 18 வது ஓவரில் மனிஷ் பாண்டே 54 ரன்களுடன் நடையை கட்டினார்.
ஆர்ச்சர் வீசிய அடுத்த ஓவரில் வில்லியம்சன் அட்டகாசமாய் 2 சிக்ஸர்கள் தூக்க,உனட்கட் வீசிய கடைசி ஓவரில் இளம் வீரர் கார்க் முதல் பந்தே ஒரு சிக்ஸர்,ஒரு பௌண்டரி நொறுக்க,ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் அடித்து ராஜஸ்தான் அணிக்கு 159 ரன்கள் இலக்காக வழங்கியது.
ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 54 ரன்களும் ,வார்னர் 48 ரன்களும் எடுத்து இருந்தனர்.
ராஜஸ்தான் அணியில் ஆர்ச்சர்,தியாகி,உனட்கட் தலா ஒரு விக்கெட் எடுத்து இருந்தனர்.