சீதம்பரத்தில் மணல் திருட்டை தடுக்க முயன்ற உதவி காவல் ஆய்வாளர் மீது டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணல் திருட்டு
சிதம்பரம் அருகே மேலமூங்கிலடி கிராமத்தில் உள்ள வெள்ளாற்றுப் பகுதியில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு காவல்துறைக்கு கிடைத்தது. இதனையடுத்து மணல் திருட்டு தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையில் 4 போலீஸார் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் மேல மூங்கிலடி வெள்ளாற்றுப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
கொலை முயற்சி
அப்போது ஆற்றுப் பகுதியில் இருந்து மணலை ஏற்றி வந்த ஒரு டிராக்டரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால், டிராக்டர ஓட்டுனரை வாகனத்தை நிறுத்தாமல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீஸாரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றனர். பின்னர் சிறிது தூரத்தில் டிராக்டரை நிறுத்திவிட்டு 2 பேர் தப்பி ஓடினர். இதில் போலீஸாரின் இருசக்கர வாகனம் சேதம் அடைந்தது.
இதனையடுத்து, மணல் ஏற்றி வந்த டிராக்டரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மணல் திருட்டு தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் சுப்ரமணியன் மற்றும் போலீஸார் சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
பரபரப்பு
சிதம்பரம் டிஎஸ்பி லாமேக், காவல் ஆய்வாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். காவல்துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து டிராக்டரில் இருந்து தப்பி ஓடியவர்களைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.