சென்னை காரப்பாக்கத்தில் இயங்கி வரும் டாய்லெட் பிரஷ் தயாரிப்பு தொழிற்சாலையில், இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தால், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானதாக கணக்கிடப்பட்டுள்ளது.
சென்னை கந்தன்சாவடி அடுத்த காரபாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான டாய்லெட் பிரஷ் தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் வருவதற்குள், தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் பரவியது. பின்னர் 3 மணி நேர கடுமையான போராட்டத்திற்கு பிறகு, தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சம்பவம் நடந்த போது, அங்கு யாரும் பணியில் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. மேலும், இந்த தீ விபத்திற்கு காரணம் மின் கசிவா, அல்லது அல்லது மர்ம நபர்கள் யாரேனும் தீ பற்றவைத்தார்களா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது தீ முழுவதும் அணைக்கப்பட்டுள்ள நிலையில், தீ விபத்தால் தொழிற்சாலையில் இருந்த உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், இயந்திரங்கள் என பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானதாக கணக்கிடப்பட்டுள்ளது.