ஆடி நிறுவனத்தின் புதிய எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடல் கார் இந்திய சந்தையில் வெளியிடுவது தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆடி இந்தியா நிறுவனம் கியூ2 மாடலை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. ரூ. 34.99 லட்சம் அதற்கான விலையாக நிர்ணயம் செய்யப்பட்டது. கியூ மாடலின் அறிமுக நிகழ்ச்சியிலேயே மற்றொரு புதிய மாடல் வெளியீட்டு விவரங்கள் அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் ஆடி நிறுவனத்தின் புதிய எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பண்டிகை காலத்தில் இந்த கார் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான டீசரும் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடல் பெரிய சிங்கிள் பிரேம் கிரில், எல்இடி டிஆர்எல்கள், ஹெட்லேம்ப்கள், பெரிய அலாய் வீல்கள், ஸ்லோபிங் ரூப்-லைன் மற்றும் பிளாக்டு-அவுட் ORVMகளை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடலில் 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது 349 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துட் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.