உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்ற மளிகை வியாபாரி வீட்டில் 20 சவரன் நகை, வெள்ளிப்பொருட்கள், பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை கல்புதிரை தர்க்கா பகுதியை சேர்ந்தவர் ரகீம்முனிஷா, மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது உறவினர் திருமணத்திற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலூருக்கு குடும்பத்துடன் சென்றார். திருமணம் முடிந்து நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வீட்டிற்கு திரும்பினார்.
வீட்டினுக்குள் சென்ற பின்பு, தன் வீட்டில் பின் பக்க மரக்கதவு தகர்க்கபட்டு இருந்ததை கவனித்துள்ளார். அதனால் சந்தேகித்து வீட்டினுள் விரைந்து ஆராய்ந்த போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதிலிருந்த 20 சவரன் நகை, 600 கிராம் வெள்ளி நகை, பொருட்கள், ₹40 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருந்தது.
ரகீம்முனிஷா வீடு 2 நாட்களாக பூட்டப்பட்டு கிடந்ததால் ஆட்கள் இல்லாததை யாரோ நோட்டம் விட்டு தாக்கம் சமயம் பார்த்து வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவையும் உடைத்து உள்ளே இருந்த பொருட்களை கொள்ளை அடித்துள்ளனர். இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசில் ரகீம்முனிஷா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காமெராவையும் ஆராய்ந்து வருகின்றனர்.