மின்சார வாகனங்களுக்கு 100% வரி விலக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சுற்றுசூழல் மாசுபாட்டை தவிர்க்கும் நோக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகின்றன. பிஎஸ்6 வாகனங்கள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த வலியுறுத்தி, அதனை ஊக்குவித்து பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகின்றன. காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி அரசு இதில் முன்னணியில் உள்ளது.
இந்நிலையில், பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும் என அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்ற மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக பேட்டரி மூலம் இயங்கும் அனைத்து மின்சார வாகனங்களுக்கும் மோட்டார் வாகன வரி 100% விலக்கு அளிக்கப்படுவதாகவும், நவம்பர் 3ம் தேதி முதல் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று தமிழக அரசின் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.