சென்னையில் பொருத்தப்பட்டுள்ள, சுமார் 2.5 லட்சம் சிசிடிவி கேமராக்களில் 60 ஆயிரம் கேமராக்கள் செயல்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில், மக்கள் நெருக்கடி அதிகரித்துள்ளதால், குற்றங்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதனால், நாள்தோறும் நடக்கும் செயின் பறிப்பு, மொபைல் போன் பறிப்பு, வழிப்பறி மற்றும் அடையாளம் தெரியாத வாகனங்களால் ஏற்படும் விபத்துகள் போன்றவற்றை அடையாளம் காண்பது போலீசாருக்கு பெரும் பிரச்னையாக இருந்தது.
அந்த சூழலில், சென்னை பெருநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற ஏ.கே.விஸ்வநாதன், ‘மூன்றாவது கண்’ என, தலைப்பிட்டு சென்னையின் மூலை முடுக்குகளில் எல்லாம், சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகளை முடுக்கிவிட்டார்.
அத்துடன், பொதுமக்கள், குடியிருப்போர் சங்கத்தினர், தொழில் நிறுவனத்தினர் மற்றும் எம்.பி.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, சென்னையில், 2.5 லட்சம், ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்த காரணமாக இருந்தார். மக்களிடம், ‘சிசிடிவி’ கேமராவின் அவசியம் குறித்து, சினிமா பிரபலங்கள் வாயிலாக, விழிப்புணர்வு, சிடி-யும் வெளியிடப்பட்டது. இதன் பயனாக, ‘சிசிடிவி’ கேமராக்கள் வாயிலாக, குற்றவாளிகள் எளிதில் அடையாளம் காணப்பட்டனர்.
இந்நிலையில், போதிய பராமரிப்பின்றி, சென்னையில் பொருத்தப்பட்டுள்ள, 25 சதவீதம் கேமராக்கள் செயலிழந்துவிட்டதாக, போலீஸ் அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. மீதமுள்ள, ‘சிசிடிவி’ கேமராக்கள், முழு பயன்பாட்டில் உள்ளதா என்பது குறித்து, சென்னை முழுதும் ஆய்வு நடத்தி, உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மரம் விழுந்தது, மழை பாதிப்பு காரணமாக, பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ள, ‘சிசிடிவி’ கேமராக்கள் பழுதடைந்துள்லதாகவும்,
குறிப்பாக வெட்ட வெளி, நெடுஞ்சாலைகளில் பொருத்தப்பட்ட கேமராக்கள் தான் அதிகம் செயலிழந்து உள்ளன. அவற்றை சீர் செய்யும் பணி நடக்கிறது. மீதமுள்ள, ‘சிசிடிவி’ கேமராக்கள், முழு பயன்பாட்டில் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். விரைவில், சென்னையில் உள்ள, 2.5 லட்சம், ‘சிசிடிவி’ கேமராக்களையும் முழு பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம், என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.