கட்டட உட்புற வடிவமைப்பாளரை தற்கொலைக்குத் தூண்டியதாக ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உள்நோக்கத்துடன் கைது செய்யவில்லை என்று சிவ சேனா கட்சியின் மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
கட்டட உட்புற வடிவமைப்பாளர் அன்வய் நாயக் மற்றும் அவரது தாயார், கடந்த 2018-ஆம் ஆண்டு தற்கொலை செய்துக் கொண்டனர். இவர்கள் இருவரையும் தற்கொலைக்கு தூண்டியதாக ஊடகவியலாளரும், ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமி மீது அன்வய் நாயக்கின் உறவினர் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு விசாரணையும் நடத்தப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 2019-ஆம் ஆண்டு முடித்து வைக்கப்பட்ட நிலையில், இன்று காலை அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீசார் கைது செய்து, விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து, அர்னாப் கோஸ்வாமி கூறும்போது, வீட்டில் இருந்த தன்னை வலுக்கட்டாயமாக போலீசார் அழைத்துச் சென்றதாகவும், மேலும் வீட்டில் இருந்தவர்களையும் தன்னையும் போலீசார் தாக்கியதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கடந்த 2019-ஆம் ஆண்டே முடிக்கப்பட்ட இந்த வழக்கை மீண்டும் காவல்துறையினர் விசாரிப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவ சேனா கட்சி மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத், எந்தவித உள்நோக்கத்துடனும் ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்யவில்லை என்றும், சட்டத்திற்கு உட்பட்டே அரசு இயங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.