ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியத்தை மாற்றியமைக்க, 8 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் 36 ஆயிரம் ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய வரம்பு மாற்றி அமைக்கப்படுவது வழக்கம் ஆகும். அதன்படி, கடைசியாக கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் 9- ஆம் தேதி புதிய ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு, அமலுக்கு வந்தது.
இந்த அறிவிப்பால், ரேஷன் கடையில் பணியாற்றும் 33,600 விற்பனையாளர்களும், 5,500 எடையாளர்களும் பயனடைந்தனர். இந்த ஊதிய ஒப்பந்த நடைமுறைகள் இந்த ஆண்டுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், தற்போது புதிய ஊதியம் நிர்ணயம் செய்வதற்கான 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இக்குழுவின் தலைவராக மாநில தலைமை கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் சக்தி சரவணன், பதிவாளர் அலுவலக இணை பதிவாளர் சுபாஷினி கட்டுப்பாட்டில், நிதித்துறை இணை செயலாளர் பாலசுப்ரமணியன், திருவல்லிக்கேணி இணை பதிவாளர் சந்திரசேகரன், சென்னை பொது விநியோக திட்ட இணைப்பதிவாளர் ஜவஹர் பிரசாத்ராஜ், திருச்செங்கோடு இணைப்பதிவாளர் ரவிக்குமார், ஈரோடு மண்டல இணைப்பதிவாளர் பார்த்திபன், காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் சிதம்பரம் ஆகிய 6 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இக்குழு, புதிய ஊதிய பரிந்துரைகள் குறித்த அறிக்கையை 3 மாதத்திற்குள் அரசுக்கு தாக்கல் செய்ய வேண்டும். புதிய ஊதியம் நிர்ணயிக்கப்படுவதற்கு முன்பு, தற்காலிகமாக சிறப்பு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று ரேஷன் கடை பணியாளர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன்மூலம், ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.