பந்தயங்களில் கலந்து கொள்ளும் வீரர்களின் எதிர்பார்ப்புகளை கச்சிதமாக பூர்த்தி செய்யும் விதத்தில், சிறப்பு பதிப்பு ராலி ரேஸ் பைக் மாடலை கேடிஎம் உருவாக்கியுள்ளது.
உலகின் அதிசிறந்த ராலி ரேஸ் வகை பைக்குகள் தயாரிப்பில் கேடிஎம் நிறுவனம் சிறந்து விளங்குகிறது. டக்கார் உள்ளிட்ட உலகின் பல முதன்மையான ராலி ரேஸ் பந்தயங்களில் பல சாம்பியன் பட்டங்களை பெற்று முத்திரை பதித்துள்ளது கேடிஎம்.
சவால்கள் நிறைந்த பல மோசமான நிலபரப்புகளை கடக்கும் வகையில் நடந்தப்படும் ராலி பந்தயங்களுக்கு ஏற்றவாறு மிகச் சிறப்பான டிசைன் செய்யப்பட்டு உள்ளது. அதாவது, எந்த ஒரு நிலபரப்பையும் அல்லது சாலைகளையும் மிக எளிதாக கடக்கும் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. எளிதான கையாளுமையும், அதிக உறுதிமிக்க கட்டமைப்பும் இதன் முக்கிய சிறப்பாக அமையும்.
கேடிஎம் 450 ராலி ரேஸ் ரெப்லிக்கா என்ற பெயரில் இந்த புதிய பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மொத்தமாக 85 யூனிட்டுகள் மட்டுமே விற்பனைக்கு செல்ல இருக்கிறது. ஆர்டர் செய்து இந்த பைக்கை வாங்க முடியும்.
இந்த புதிய ராலி ரேஸ் பைக் மாடலானது டக்கார் உள்ளிட்ட ராலி பந்தயங்களில் கேடிஎம் அணி சார்பில் பங்கு கொண்டு சாதித்த டோபி பிரைஸ், மேத்தியாஸ் வாக்னர் மற்றும் சாம் சுந்தர்லேண்ட் உள்ளிட்டோர் வழங்கிய பின்னூட்டங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
டக்கார் ராலி மற்றும் க்ராஸ் கன்ட்ரி வகை ராலி பந்தயங்களில் பயன்படுத்தப்படும் கேடிஎம் ராலி ரேஸ் பைக்குகளின் அடிப்படையில்தான் இந்த பைக் மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய கேடிஎம் 450 ராலி ரெப்லிக்கா பைக்கில் 450 சிசி எஸ்ஓஎச்சி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. கெஹின் நிறுவனத்திடம் எஞ்சின் மேனேஜ்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. உயர் செயல்திறனுக்கான விசேஷ ஏர் ஃபில்டர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த பைக்கின் கியர்பாக்ஸில் கியர் மாற்றம் மிகவும் சிறப்பாக இருக்கும் என கேடிஎம் தெரிவித்துள்ளது.
இந்த பைக்கில் அக்ரபோவிக் புகைப்போக்கி அமைப்பு இடம்பெற்றுள்ளது. இதனால், செயல்திறன் சிறப்பாக இருப்பதுடன், அதிக தூரம் பைக்கை ஓட்டிச் செல்லும்போது பிரச்னைகள் இல்லாத ஓட்டுதல் அனுபவத்தை தரும்.
இந்த பைக்கில் க்ரோம்- மோலி ஸ்டீல் என்ற இலகு எடைகொண்ட உலோகத்தாலான ட்ரெலிஸ் ஃப்ரேம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் 48 மிமீ WP XACT PRO கேட்ரிட்ஜ் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் காஸ்ட் அலுமினியத்தாலான ஸ்விங் ஆர்ம் உடன் இணைக்கப்பட்ட மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. முன்புற சஸ்பென்ஷன் 305 மிமீ டிராவல் நீளமும், பின்புற சஸ்பென்ஷன் 300 மிமீ டிராவல் நீளமும் கொண்டது.
முன்சக்கரத்தில் 300 மிமீ விட்டமுடைய வென்டிலேட்டட் ரோட்டர்கள் கொண்ட டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது. ஸ்போக்ஸ் கொண்ட சக்கரங்கள், நாபி வகை டயர்கள் இடம்பெற்றுள்ளன. எஞ்சின் பகுதியை பாதுகாப்பதற்காக அடிப்பாகத்தில் பாஷ் பிளேட் அமைப்பும் இருக்கிறது.
அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் டக்கார் ராலி பந்தயத்தில் இந்த புதிய பைக் மாடலின் செயல்திறனை பார்க்கும் வாய்ப்பு ரேஸ் பிரியர்களுக்கும், வீரர்களுக்கும் உள்ளது இந்த பைக்கிற்கு 25,900 யூரோ விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.22.34 லட்சம் விலை மதிப்பில் சந்தைக்கு வர இருக்கிறது.