மஹிந்திரா மோஜோ பைக்கின் பிஎஸ்-6 மாடலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் ஸ்போர்ட்ஸ் டூரர் பைக் மார்க்கெட்டில் மஹிந்திரா மோஜோ பைக்கிற்கு ஓரளவு வரவேற்பு இருந்து வருகிறது. இருசக்கர வாகனத் தயாரிப்பில், தொழில்நுட்ப திறனை பரைசாற்றும் விதத்தில், இந்த மாடலை விற்பனையில் வைத்துள்ளது மஹிந்திரா.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, மஹிந்திரா மோஜோ பைக்கின் எஞ்சின் பிஎஸ்-6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. விற்பனைக்கு முந்தைய சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட இந்த பைக் தற்போது விற்பனைக்கு தயாராக உள்ளது.

இந்த பைக்கை சந்தைக்கு கொண்டு வருவற்கு முன்னதாக, முன்பதிவை தொடங்கி இருக்கிறது மஹிந்திரா நிறுவனம். ரூ.5,000 முன்பணத்துடன் புக்கிங் செய்து கொள்ளலாம் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது.
மஹிந்திரா மோஜோ பைக்கின் டிசைனில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. பிஎஸ்-4 மாடலின் டிசைன் அம்சங்களை ஒத்திருக்கிறது. இரட்டை க்ளஸ்ட்டர்கள் கொண்ட ஹெட்லைட் அமைப்பு, ஒற்றை இருக்கை அமைப்பு, கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட எஞ்சின், அலாய் வீல்கள், வலிமையான பெட்ரோல் அமைப்பு ஆகியவை இதிலும் உள்ளது. மோஜோ பிஎஸ்6 மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்படும் என தெரிகிறது.

புதிய மஹிந்திரா மோஜோ பைக்கின் பிஎஸ்-6 மாடலில் 295 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 30 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா மோஜோ 300 பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் இடம்பெற்றிருக்கின்றன. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை இடம்பெறும்.
மஹிந்திரா மோஜோ பைக்கில் பிஎஸ்-6 தரத்திற்கு தக்கவாறு சைலென்சரில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலமாக, மாசு உமிழ்வு குறைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பிஎஸ்-4 மாடலைவிட சற்றே கூடுதல் விலையில் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.