உரிமைக்குழு நோட்டீசை எதிர்த்த வழக்குகளில் டிசம்பர் 2ம் தேதி இறுதி விசாரணை…
கடந்த 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததாக பேரவை உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாக கூறி அதை ரத்து செய்தது.
இதையடுத்தி மீண்டும் கூடிய உரிமைக்குழு, இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸை அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ-க்கள் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தும், வழக்கு குறித்து பேரவை செயலாளர், உரிமைக்குழு மற்றும் அதன் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் இரண்டாவது நோட்டீசை எதிர்த்து திமுகவிலிருந்து நீக்கப்பட்ட கு.க.செல்வம் தொடர்ந்த வழக்கும், இடைக்கால தடையை நீக்க கோரி சட்டமன்ற செயலாளர், உரிமைக்குழு சார்பில் தொடர்ந்த வழக்குகளும், திமுக எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்குகளும் நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது கு.க.செல்வத்திற்கு எதிரான நோட்டீசுக்கும் நீதிபதி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.மேலும், இரண்டாவது நோட்டீஸை எதிர்த்த வழக்குகளிலும், அவற்றில் விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய வழக்குகளின் இறுதி விசாரணையை டிசம்பர் 2ஆம் தேதிக்கு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா தள்ளிவைத்துள்ளார்.