சபரிமலைக்கு செல்லும் தமிழக பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் என்னவென்று கன்னியாகுமரி ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி:
சபரிமலைக்கு செல்லும் தமிழக பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் என்னவென்று கன்னியாகுமரி ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மகர பூஜை:
கேரளம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நவம்பர் 15ம் தேதி முதல் டிசம்பர் 26ம் தேதி வரையும், மகர விளக்கு திருவிழா டிசம்பர் 30ம் தேதி முதல் ஜனவரி 14ம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.
பல்வேறு இடங்களில் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் தமிழக, கேரள எல்லைப்பகுதியான குமரி வழியாக செல்லும் அனைத்து ஐயப்ப பக்தர்கள் அறியும் வண்ணம் கொரோனா தொடர்பான பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை கேரள அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா நெகட்டிவ் சான்று:
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் இந்த நெறிமுறைகளை பின்பற்றிட வேண்டும். சபரிமலை செல்லும் அனைத்து பக்தர்களும் https://sabarimalaonline.org என்ற காவல்துறை இணையதளத்தில் பதிவு செய்திட வேண்டும்.
வார நாட்களில் தினசரி 1000 பக்தர்கள் வீதமும், வார கடைசி நாளில் 2000 பக்தர்களும் முதலில் பதிவு, மற்றும் முதலில் வருபவர்கள் என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படுவர். கோவிட் நெகட்டிவ் சான்று எடுக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் சபரிமலை தரிசனம் செல்வதற்கு அனுமதிக்கப்படும் வகையில் பதிவு செய்வது கட்டாயமாகும்.
யாருக்கு அனுமதியில்லை?
65 வயதிற்கு மேற்பட்டவர்களும், 10 வயதிற்குட்பட்டவர்களும் கட்டாயமாக அனுமதிக்கப்படுவதில்லை. இணை நோயுள்ளவர்கள் கண்டிப்பாக சபரிமலை யாத்திரை செல்வதை தவிர்த்திட வேண்டும். பக்தர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான அடையாள அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை, மற்றும் பிற அடையாள அட்டை போன்றவற்றை யாத்திரையின்போது கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
பம்பை ஆற்றில் குளிப்பது, சபரிமலை சன்னிதானம், பம்பை கணபதி கோயில் ஆகிய இடங்களில் இரவில் தங்குவது மற்றும் நெய் அபிஷேகம் ஆகியவை அனுமதிக்கப்பட மாட்டாது.
வழித்தடம்:
சபரிமலை செல்லும் யாத்ரீகர்கள் எருமேலி, வடசேரிக்கரை ஆகிய இரு வழித்தடம் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவர். வேறு பாதைகளில் செல்ல அனுமதி இல்லை. பக்தர்கள் அரசின் இந்த கரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.