கொரோனா நோய் பரவல் காரணமாக சென்னையில் நிறுத்தப்பட்ட புறநகர் ரயில் சேவை மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்காக 204 சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் மேலும் 40 சிறப்பு மின்சார ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், கொரோனா தடுப்பு முதல் நிலை பணியாளர்களுக்காக முதற்கட்டமாக 150 சிறப்பு புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 204 சிறப்பு மின்சார ரெயில் சேவைகளாக விரிவுபடுத்தப்பட்டது. தற்போது நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருவதால், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் கூடுதல் ரெயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்கள்.
அந்த வகையில் தற்போது கூடுதலாக 40 சேவைகள் அதிகரிக்கப்பட்டு, 244 மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றது. மேலும் சென்னையின் புறநகர்களான ஆவடி, கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி, செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை எழும்பூர் மற்றும் எம்.ஜி.ஆர். சென்ட்ரல் இடையே இயக்கப்பட்டு வந்த நிலையில் கூடுதலாக திருத்தணி வரை மின்சார ரெயில்களின் இயக்கம் விரிவு படுத்தப்படும் என்றும் இதற்கான அட்டவணை, நேரம் பின்னர்அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.