
சென்னை மாநகர பகுதிகளுக்கு நீர் ஆதாரமான பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் மூலம் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கடந்த ஆண்டுகளில் போதுமான மழை இல்லாததால் ஏரிகளில் நீர் சேமிப்பின் அளவு மிக குறைவாகவே இருந்தது. தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஆந்திர அரசுடன் செய்து கொண்ட கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல் தவணைக்கான தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்தநிலையில் வடகிழக்கு பருவ மழையும் தொடங்கி இருப்பதால் கடந்த சில நாட்களாக 4 ஏரிகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து வந்தது. பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், மழை தண்ணீரும் ஏரிக்கு வருவதால் ஏரிகளின் நீர்மட்டம் தற்போது 7 டி.எம்.சி.யை தாண்டி உள்ளது.

தற்போதைய நிலவரப்படி பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளிலும் (7.09 டி.எம்.சி.) நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3 ஆயிரத்து (3.16 டி.எம்.சி.) நீர் மட்டுமே இருந்தது.
சராசரியாக மாதம் ஒரு டி.எம்.சி. என்ற அடிப்படையில் தேவை இருக்கும் போது, தற்போது இருக்கும் நீர் சராசரியாக 7 மாத தேவையை பூர்த்தி செய்ய முடியும். இருந்தாலும் வரும் நாட்களிலும் மழை நன்றாக பெய்தால் ஏரிகளின் நீர்மட்டம் இன்னும் உயரும் என பொதுபணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




