பயனர்களை கவரும் வகையில் இந்தியாவில் 2 நாட்களுக்கு இலவச சேவையை வழங்க உள்ளதாக முன்னணி OTT தளங்களில் ஒன்றான நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் அதிகரித்தது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், திரையரங்குகள் மூடப்பட்டன. அந்த சமயத்தில் மக்கள் பொழுது போக்குக்காக அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களில் கணக்குகளை தொடர்ந்து வெப் சீரிஸ், திரைப்படம் உள்ளிட்டவற்றை கண்டுகளித்து வந்தனர். இதனிடையே பென் குயின், மூக்குத்தி அம்மன், சூரரைப் போற்று போன்ற திரைப்படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாயின.
இந்த நிலையில் ஓடிடி தளங்களில் முன்னணியில் இருக்கும் நெட்பிளிக்ஸ் இந்தியாவில் வரும் டிசம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் தனது சேவையை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்த சேவையை பெற விரும்புவர்கள் netflix.com/StreamFest என்ற இணைய முகவரியில் தங்களது பெயர், இமெயில் ஐடி அல்லது மொபைல் நெம்பர் கொண்டு கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம் என நெட்ப்ளிக்ஸ் அறிவித்துள்ளது.
இதுகுறித்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் பார்வையாளர்களை கவரவே இத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது. இருப்பினும், தனது போட்டி நிறுவனங்களை சமாளிக்கவே நெட்பிளிக்ஸ் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.