மருத்துவ காரணங்களுக்காக பேரறிவாளனின் உடல் நிலையை கருத்தில் கொண்டு பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பதாக உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை முடிந்த பிறகும் பேரறிவாளன் இன்னும் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.தன்னை விரைவில் விடுதலை செய்யக்கோரி டெல்லி உச்ச நீதி மன்றத்தில் அவரது சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,தமிழக ஆளுநர் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் காலம் தாழ்த்துவது ஏன்?இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநருக்கு தமிழக அரசு ஆலோசனை வழங்காதது ஏன்? என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்விகள் எழுப்பினர்.மேலும் காலம் தாமதிக்காமல் விரைவில் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என ஆளுநருக்கு உத்தரவிட்டது.
அதனை தொடர்ந்து,பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய பரோல் காலம் வரும் 30 ம் தேதி நிறைவடைவதால், பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், பேரறிவாளன் சிகிச்சைக்கு அழைத்து செல்லும்போது போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.