மருத்துவர்களின் உயர்கல்விக்கனவை மத்திய அரசு பாழ்படுத்தியுள்ளது என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு பாழ்
தமிழக மாணவர்களின் கனவினைச் சிதைத்த மத்திய அரசு, இப்போது அரசு மருத்துவர்களின் உயர் சிறப்பு மருத்துவக் கல்விக் கனவினையும் பாழ்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாஜக அரசின் இந்தச் சமூக நீதி துரோகத்திற்குத் துணைபோகும் வகையில், இந்த இட ஒதுக்கீட்டை அளித்து அரசாணை வெளியிட்ட பழனிசாமி அரசு, அதற்கான கலந்தாய்வை மேற்கொள்ளாமல் காலம் கடத்தியது. உரிய நேரத்தில் கலந்தாய்வு நடத்தி முடித்திருந்தால் அரசு மருத்துவர்களுக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்தவுடன் இந்த இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். முதல்வர் பழனிசாமி, மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் துளி கூடக் கவனம் செலுத்தவில்லை.

துரோகக்கூட்டணி
போராடிப் பெற்ற சமூக நீதியின் பயன் இந்த ஆண்டே அரசு மருத்துவர்களுக்குக் கிடைக்காமல் போகும் வகையில், கூட்டணியாகத் துரோகம் செய்த முதல்வர் பழனிசாமிக்கும், மத்திய அரசுக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




