சினிமா காட்சி போல் வழிப்பறி ஆசாமிகளை துரத்தி பிடித்த எஸ்ஐக்கு பாராட்டு.
மணலி புதுநகர் எம்.எம்.டி.ஏ. என்னும் காலனியை சேர்ந்த ரவி என்பவர் நேற்று முன்தினம் காலை மாதவரம் மேம்பாலம் அருகில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு பைக்கில் வந்த 2 பேர் இவரது செல்போனை பறித்துக்கொண்டு போயினர். அதை உணர்ந்த ரவி அதிர்ச்சியடைந்து, அதை அறிந்த பொது மக்கள் கூச்சலிட்டபடி அவர்களை துரத்தினார். அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த மாதவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆண்டலின் ரமேஷ் இதை பார்த்து, தனது பைக்கில் கொள்ளையர்களை விரட்டினார்.
சினிமா காட்சி போல் போலீசிடம் சிக்காமல் வாகனத்தை வளைத்து வளைத்து ஒட்டி கொண்டு சென்றனர். ஆயினும் இந்த எஸ்ஐ அந்த கொள்ளையர்களை விடாமல் துரத்திச் சென்றுள்ளார். சாஸ்திரி நகர் அருகே கொள்ளையர்கள் சென்ற பைக் தடுமாறியதில் இருவரும் கீழே விழுந்தனர். உடனே, எஸ்ஐ அவர்களை பிடிக்க முயன்றபோது, ஒருவர் ஓட்டம் பிடிக்க, மற்றொருவர் மீண்டும் பைக்கில் தப்பிக்க முயன்றார்.
அப்போது, எஸ்ஐ ரமேஷ் தனது பைக்கை கீழே போட்டுவிட்டு, பைக்கில் தப்ப முயன்ற நபரை மடக்கி பிடித்தார். பின்னர் அவர்களை கைது செய்து விசாரித்தனர். அப்போது விசாரணையில், சர்மா நகரை சேர்ந்த அருண்ராஜ் என்பது தெரியவந்தது. அவர் அளித்த தகவலின் பேரில் தப்பிய மாத்தூரை சேர்ந்த நவீன்குமார் மற்றும் அவரது நண்பர் ராயபுரத்தை சேர்ந்த விக்னேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 11 செல்போன்கள், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில், இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் ராயபுரம், மாதவரம் பகுதியில் 4 நபர்களிடம் தொடர்ச்சியாக செல்போன் பறித்தது தெரியவந்தது. தொடர்ந்து, அவர்களை சிறையில் அடைத்தனர். இதுபற்றி அறிந்த போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், எஸ்ஐயை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.