சமூக வலைதளங்களில் ட்விட்டருக்கு தனி இடம் எப்போதுமே உண்டு.
சமூக வலைதளங்கள் என்பது இன்று அசைக்க முடியாத மக்களின் குரலாக மாறி வருகிறது. அந்த வகையில் இந்த சமூக வலைதளங்களில் ட்விட்டருக்கு தனி இடம் எப்போதுமே உண்டு.
ட்விட்டரில் ஒருவர் கணக்கு வைத்திருந்தால் அதில் பிரபலங்கள், எழுத்தாளர்கள், ஊடகங்கள், பிசினஸ் தொடர்பான கணக்குகள் என பலவற்றிற்கும் ட்விட்டர் சரிபார்த்து ‘வெரிஃபைட்’ என ப்ளூ டிக் கொடுத்து வந்தது.
இது அந்த கணக்கின் நம்பகத்தன்மையை மக்கள் மத்தியில் அதாவது அது போலியானது இல்லை என்பதை குறிக்கும் வகையில் இருந்து வந்தது. ஆனால், எதை வைத்து இந்த ப்ளூ டிக்? பிரபலம் என்பதற்கு என்ன அளவுகோல்? என பல சர்ச்சைகள் கிளம்பியதால் இந்த வசதியை ட்விட்டர் நிறுவனம் கடந்த 2017ல் நிறுத்தியது.
அந்த வகையில் தற்போது மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த ப்ளூ டிக் வசதியை கொண்டு வர ட்விட்டர் முடிவு செய்துள்ளது. அரசு நிறுவனங்கள், விளையாட்டு துறை, பிராண்டுகள், பொழுது போக்கு, செய்தி நிறுவனங்கள் மற்றும் செல்வாக்கான நபர்களுக்கு மட்டும் என இவைகளுக்கு மட்டும் ப்ளூ டிக் என விதிகளை வரையறுத்துள்ளது ட்விட்டர். ட்விட்டரின் இந்த முடிவுக்கு மக்கள் தங்கள் கருத்துகளை இந்த மாதம் 8ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.