பாபர் மசூதி இடிப்பு தினம் காரணமாக, சென்னையில் இன்று 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பாபர் மசூதி இடிப்பு நாள்
உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த சம்பவம் இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது. இதன் பிறகு, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ந் தேதி இஸ்லாமிய அமைப்பினர் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பான வழக்கும் முடிவுற்று, அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகளும் இந்தாண்டு தொடங்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் உரிய நீதி வழங்கப்படவில்லை என்று கூறி இந்த ஆண்டும் போராட்டம் இஸ்லாமிய அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி நாளை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
10 ஆயிரம் போலீசார்
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட இடங்களில் 23 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதேபோல் தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.இந்த போராட்டம் காரணமாக சென்னையில் நாளை பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.