தமிழகத்தில் உள்ள அனைத்து சிறார் காப்பகங்களிலும் சமூக தணிக்கை செய்ய குழந்தைகள், உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி-யின் பச்பன் பச்சோ அந்தோலன் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் 2015ல் இயற்றப்பட்ட சிறார் நீதி (குழந்தைகள் பாதுகாப்பு) சட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் கண்டிப்புடன் அமல்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருந்தும், உச்ச நீதிமன்ற த்தின் உத்தரவுப்படி, இச்சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை எனவும், சிறார் நீதி சட்டம் வரையறுத்துள்ள தரத்தின் அடிப்படையில் சிறுவர்கள் காப்பகம் இல்லை எனவும் மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறார் நீதி சட்டம் அமல்படுத்தப்படுவதை தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கண்காணிக்க வேண்டும் எனவும், தமிழகத்தில் பல மாவட்டங்களில் சிறார் நீதி வாரியம், குழந்தைகள் நல ஆணையத்தில் பதவிகள் காலியாக உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிறார் நிதி வாரியத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், மாவட்டம் தோறும் சிறப்பு சிறார் காவல் பிரிவு, சிறார் நல காவல் அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும், இந்த நியமனங்களுக்கு பின்பற்றப்படும் நடைமுறை என்ன? என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறார்களின் மறுவாழ்வுக்கு விரிவான வரைவு வழிகாட்டி விதிகளை வகுக்க வேண்டும் எனவும், தமிழகத்தில் உள்ள அனைத்து சிறார் காப்பகங்களிலும் சமூக தணிக்கை செய்ய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருக்கிறார்.இந்த மனுவை விசாரித்த உயர் நீதி மன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மனுவுக்கு ஜனவரி 20ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.