சென்னை – சேலம் இடையிலான எட்டுவழிச் சாலை திட்டத்துக்கு நிலத்தைக் கையகப்படுத்தும் தமிழக அரசின் அரசாணைக்குத் தடை விதித்து கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், தடை உத்தரவு நீடிக்கும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
“மீண்டும் நிலம் கையகப்படுத்த புதிய அரசாணையை வெளியிட வேண்டும் எனவும், உரிய துறைகளில் அனுமதி பெற்று வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 8 வழிச்சாலை திட்டத்தைப் புதிதாகத் தொடங்கலாம் சுற்றுச்சூழல் அனுமதியும் பெற வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளார் எட்டுவழிச் சாலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், உழவர்களின் நலன்களைப் பாதிக்கும் இத்திட்டத்தைச் செயல்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது; இது ஏமாற்றமளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
8 வழிச்சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் 7,000 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் கையகப்படுத்தப்படும் எனவும், 10 ஆயிரத்திற்கும் கூடுதலான விவசாயக் குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழக்கும் என்றும் கூறிய அவர்,
“இப்படி ஒரு தீர்ப்பை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பில் ஆறுதல் அளிக்கும் அம்சம் ஒன்று உள்ளது. 8 வழிச்சாலைக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருக்கும் போதே, உழவர்களின் பெயர்களிலிருந்த நிலங்களை அரசாங்கத்தின் பெயர்களுக்கு மாற்றி வருவாய்த்துறை ஆவணங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது. அதன்படி 8 வழிச்சாலை திட்டத்திற்காக உழவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்கள் அனைத்தும் இப்போது ஆவணங்களின்படி உழவர்களிடமே திருப்பி வழங்கப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உழவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அவர்களின் நலன்களைக் கருதியும், அவர்களின் விருப்பங்களின் படியும் நிலம் கையகப்படுத்தப்படுவதை அரசு தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அத்துடன், வாணியம்பாடியிலிருந்து திருப்பத்தூர், ஊத்தங்கரை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மஞ்சவாடி, அயோத்திப்பட்டினம் வழியாகச் சேலத்திற்குச் செல்லும் சாலை தேசிய நெடுஞ்சாலை 179- ஏ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை 4 வழிச்சாலையாக மாற்றும் திட்டம் ரூ.521 கோடியில் தயாரிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நிறைவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளன. இந்தப் பணிகள் முடிவடைந்தவுடன் 8 வழி பசுமைச்சாலைக்கு தேவையே இருக்காது என்பதால் சென்னை- சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்தைக் கைவிடும்படி மத்திய அரசுக்குத் தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.