ரஜினிகாந்த் மக்களைச் சந்தித்த பிறகு கருத்து கூறுகிறேன் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கடலூரில் நிவர் மற்றும் புரவி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
மக்களுக்காக போராடுவோம்
கடலூரைப் பொறுத்தவரை தானே புயல், நீலம் புயல், கஜா, நிவர், தற்போது புரெவி புயல் என எந்தப் புயலாக இருந்தாலும் டிசம்பர் மாதம் வந்து பேரழிவைக் கொடுத்துச் செல்கிறது. கடலோரம் உள்ளதால் கடலூர் மாவட்டம் அதிகமாகப் பாதிக்கப்படுகிறது.

எந்தப் புயலாக இருந்தாலும் முதலில் தே.மு.தி.க. களத்தில் இறங்கி மக்களுக்காகப் போராடும். அனைத்துப் பிரச்சினைகளையும் நம்மால் தீர்க்க முடியாது. இருந்தாலும் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம்.
விவசாயிகள் பாதிப்பு
ஆனால், ஆளுங்கட்சியினர் கவனத்திற்குக் கொண்டுசென்று மக்களுக்குத் தேவையானதைப் பெற்றுத் தரும் இயக்கம் தே.மு.தி.க. சேதம் குறித்து மத்தியக் குழுவினர் ஆய்வு செய்து சென்றுள்ளனர்.விவசாயிகள் பெரிய பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். வயல்வெளிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். ஆனால், அரசு எந்தவித உயிர்ச் சேதமும் இன்றி நடவடிக்கை எடுத்ததற்காகப் பாராட்டுகிறோம். விவசாயிகளுக்கு மட்டுமே காப்பீடு மறுக்கப்படுகிறது.

கட்சி தொடங்கட்டும்
வேளாண் சட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடும் விவசாயிகளும் மத்திய அரசும் விட்டுக்கொடுத்து, பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண வேண்டும். பஞ்சாப்பில் கோதுமை விளைச்சல் அதிகமாக இருப்பதால் விவசாயிகளின் பின்னணியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் இருப்பதாக உணர்கிறேன். ரஜினிகாந்த் முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும். கட்சியின் பெயரைக் கூறட்டும். தமிழ்நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்திக்கட்டும். பிறகு எங்கள் கருத்தைக் கூறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.




