உண்மையை மறைப்பதற்காக தகுதியற்ற சிலரை அனுப்பி பேட்டி அளிக்க வைக்க வேண்டாம் என்று முதல்வருக்கு ஆ.ராசா கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. எம்.பி.யுமான ஆ.ராசா இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:-
ஜெ.மீதான குற்றச்சாட்டு
2ஜி வழக்கை எதிர்கொண்டு வெற்றி பெற்ற என் மீதும் தாங்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறும் விதமாக அதே தேதியில் நானும் யார் ஊழல்வாதி, எந்தக் கட்சி ஊழல் கட்சி என்பதைப் பகிரங்கமாகவும் பட்டவர்த்தனமாகவும் ஆதாரத்தோடு குறிப்பிட்டேன்.
திமுக மீது தாங்கள் தெரிவித்த வீராணம், சர்க்காரியா, 2ஜி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எவையும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லையென்றும், ஆனால் ஜெயலலிதா மீது ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு சிறை சென்றவர் என்றும், அவர் சிறை செல்லக் காரணமாக இருந்த கீழமை நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு
இதுகுறித்து விவாதித்து உண்மையை நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த என்னைக் கோட்டைக்கு அழையுங்கள் என்று வேண்டியதோடு, அப்போது உங்கள் அமைச்சரவையையும் – மத்திய அரசின் அட்டார்னி ஜெனரலையும் – மாநில அட்வகேட் ஜெனரலையும் அழையுங்கள் என்று பகிரங்க சவால் விட்டிருந்தேன். தங்களுக்கு ஏனோ அந்தத் திராணியும் – தெம்பும் இல்லை என்பதை நடுநிலையாளர்கள் உணர்ந்துள்ளார்கள். உங்கள் தலைவியின் மீது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் அடர்த்தி அத்தகையது.
நீதிமன்ற தாக்குதல்
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்து இன்று வரை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு விசாரணையை எதிர்கொண்ட எந்த அரசியல்வாதியும், உங்கள் தலைவியைப் போல் நீதிமன்றத் தாக்குதலுக்கு ஆளானதில்லை. சசிகலாவோ, சுதாகரனோ, இளவரசியோ அரசியல் சட்டத்தின்பால் உறுதிமொழி எடுத்துக் கொண்டவர்கள் அல்ல. மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தவர்களும் அல்ல. அரசியல் சட்டத்தின் முகப்புரை பண்புகளுக்கு பொறுப்பாளிகளும் அல்ல. அவர்கள் அரசியல் சட்டத்தைப் படுகொலை செய்யுமிடத்திலும் இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.
உண்மை மறைப்பு
உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் படத்தை, எங்கு சென்றாலும் முன்னிறுத்தி, அவர் வழியில்தான் ஆட்சி நடைபெறும் என்று கூறுவது எவ்வளவு அருவருப்பு கலந்த இழிவு. எது உண்மையென்று தெரிந்த பிறகாவது உண்மையை மறைப்பதையும், தகுதியற்ற சிலரை அனுப்பி பேட்டி என்ற பெயரால் பொய்களுக்கு மகுடம் சூட்டுவதையும் எதிர்காலத்திலாவது நிறுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.