குறிப்பிட்ட நிறுவனங்களிடம் மட்டும் ஜி.பி.எஸ். வாங்க கூறும் தமிழக அரசின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஸ்மார்ட் மொபிலிட்டி அசோசியேஷன் சார்பில் ஹக் ரொசியோ என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
ஜி.பி.எஸ். கருவி
மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, வாகனங்கள் செல்லக்கூடிய இடங்களின் புவியிடத்தைக் கண்டறியும் வாகனம் இருக்கும் இடத்தைக் கண்டறியும் கருவி பொருத்த வேண்டும் என்று 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது. பின்னர் அரசுத் துறை வாகனங்கள், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள், ரிக்ஷாக்கள் ஆகியவற்றிற்குத் தளர்வு வழங்கப்பட்டு, மற்ற அனைத்துப் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கும் பொருத்த வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை உத்தரவிட்டது.
குறிப்பிட்ட நிறுவனங்கள்
இந்த நிலையில் இந்த வி.எல்.டி.டி. கருவிகளைக் குறிப்பிட்ட எட்டு நிறுவனங்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என்று கடந்த நவம்பர் 18-ம் தேதி போக்குவரத்துத் துறை உத்தரவிட்டது. 140க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ள நிலையில் தன்னிச்சையாக, வெளிப்படைத் தன்மை இல்லாமல் குறிப்பிட்ட நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது சட்ட விரோதமானது.
எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். வழக்கு முடியும் வரை தடை விதிக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
இடைக்காலத் தடை
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, குறிப்பிட்ட நிறுவனங்களின் வாகன இடம் காட்டும் கருவிகளைப் பொருத்த வேண்டும்(ஜி.பி.எஸ்.) என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், வழக்கு குறித்து தமிழகப் போக்குவரத்துத் துறைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 18-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.