பொறியியல் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ஆன்லைனில் வரும் 17 ம் தேதி முதல் 30 ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
சென்னை:
உயர்கல்வியில் இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் 2020 ம் ஆண்டுக்கான பருவ தேர்வுகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது.அதனை தொடர்ந்து, இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ஆன்லைன் வாயிலாக வருகிற 17 ம் தேதி முதல் 30 ம் தேதி வரை நடத்தப்பட இருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் செய்முறை தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.அதன்படி,பின்வருமாறு :
தேர்வுகள் நடத்துவதற்கு பல்கலைக்கழகத்தின் வழக்கமான மற்றும் பொருத்தமான நடைமுறையை பின்பற்ற வேண்டும். ஆன்லைன் செய்முறை தேர்வுக்கு பொருத்தமான தளங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதாவது, திறந்த மூலதளம், விஞ்ஞான மென்பொருள் தொகுப்புகள், மாடலிங் கருவிகள், வடிவமைப்பு மென்பொருள், விரிவான மதிப்பீட்டுமுறை ஆகியவற்றை பயன்படுத்தி ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும்.ஆய்வக பாடத்திட்டத்தின் அடிப்படையில் புற மதிப்பீடு வினாக்கள் கேட்கப்படும். கூகுள், மைக்ரோசாப்ட் உள்பட திறந்த மூலதளத்தை பயன்படுத்தி சோதனை நடத்தப்படலாம் என்றும்,செய்முறை தேர்வுகளின் வினாக்களுக்கு பதில் அளிக்க ‘ஏ4’ தாள்களை பயன்படுத்த வேண்டும். இந்த தேர்வு 3 மணி நேரத்துக்கு 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் என்றும் அறிவித்தது.
அதனைத்தொடர்ந்து,தேர்வு எழுதி முடித்த பிறகு அதன் நகலை சம்பந்தப்பட்ட தேர்வு நடத்துபவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். அதை அவர்கள் பார்த்து மதிப்பீடு செய்வார்கள்.தேர்வை நடத்துபவர்கள் அந்த நகலை மண்டல அலுவலகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும். அதை மண்டல அலுவலகம் கல்லூரிவாரியாகவும், ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் என பிரித்துவைத்து சி.டி.யில் பதிவுசெய்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு அனுப்பவேண்டும்.செய்முறை தேர்வு நடைபெறும் நேரத்தில் பறக்கும்படை உறுப்பினர்கள் ஆன்லைனில் நுழைவதற்கு அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட 17 வகையான வழிமுறைகள் வெளியிடப்பட்டு இருக்கிறது என்று இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.