கர்நாடகாவைப் போலவே தமிழகத்திலும் பாஜக ஆட்சியமைக்கும் என அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்றது. ஆனாலும் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. வரும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அதிமுக முன்கூட்டியே அறிவித்துவிட்டது. இதுபற்றி பாஜக தரப்பிலிருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அகில இந்திய தலைமைதான் கூட்டணி பற்றி முடிவெடுக்கும் என ஒரு வார்த்தையில் கூறி வருகிறார் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்.
இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை ஆரம்பித்த பாஜக, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக ஹெச்.ராஜா, வி.பி.துரைசாமி, அண்ணாமலை அடங்கிய 10 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
இந்த நிலையில் சேலத்தில் பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். வேளாண் சட்டங்களின் பயன்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டுமென அதில் நிர்வாகிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
read more: ரஜினி கட்சி: நிர்வாகி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
அப்போது பேசிய சி.டி.ரவி, வேளாண் சட்டம் வந்த பிறகு பல மாநிலங்களில் நடந்த தேர்தலில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. கர்நாடகாவைப் போலவே தமிழகத்திலும் கேரளாவிலும் பாஜக ஆட்சியமைக்கும். திமுக குடும்ப நலனை காக்க பாடுபடுகிறது. பாஜக மக்கள் நலனை காக்க பாடுபடுகிறது என்று கூறினார். அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் நிலையில் சி.டி.ரவியின் இந்த பேச்சு அதிமுகவினர் மத்தியில் விவாதங்களை உண்டாக்கியுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததன் மூலம் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி கவிழ்ந்தது. இதற்கு அடுத்து அதிக பெரும்பான்மை கொண்ட பாஜக ஆட்சியமைத்தது. ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்து இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால் பாஜக ஆட்சியைத் தக்கவைத்தது. ஒருவேளை இதனை மனதில் வைத்து சி.டி.ரவி சொல்கிறாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.




