நடிகர் ரஜினிகாந்துக்கு விரைவில் சம்மன் அனுப்ப இருக்கிறது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை விசாரிக்கும் விசாரணை ஆணையம்.
2018 மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர். அந்த சமயத்தில் காயமடைந்தவர்களை தூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார் ரஜினி.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, சமூக விரோதிகளே வன்முறை சம்பவத்துக்குக் காரணம் என குற்றம்சாட்டியிருந்தார். இதற்குப் பிறகு தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் கமிஷனை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது தமிழக அரசு. பல தரப்பினரையும் அந்த ஆணையம் நேரில் விசாரித்தது. துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளதால் அவருக்கும் சம்மன் அளித்து விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
read more: நடிகர்களைப் போல வசனம் பேசும் அமைச்சர்கள்: தினகரன் குற்றச்சாட்டு!
இதனையடுத்து, நேரில் ஆஜராக ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பபட்டது. ஆனால், ரஜினி தரப்பில் இருந்து சட்டம் ஒழுங்கு காரணமாக தனக்கு விசாரணையில் இருந்து ஆஜராக விலக்கு அளிக்க கோரி கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது. எழுத்துப்பூர்வமாகத் தன்னிடம் கேள்விகள் கேட்டால் அவற்றுக்குப் பதில் அளிக்கத் தயாராக இருப்பதாகவும் ரஜினி கூறினார்.
இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் தகவல் தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் நடிகர் ரஜினிகாந்த் விசாரணைக்கு ஆஜராகி ஆணையத்திடம் பதிலளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.