சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை கிராம சபைக் கூட்டங்கள் மூலமாக ஆரம்பிக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.
சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இருந்தாலும் கொரோனா காலத்தில் திறந்தவெளி கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பிரச்சாரம் தொடங்கப்படாமல் இருந்தது. சமீபத்தில் திறந்தவெளி அரசியல் கூட்டங்களுக்கு 50 சதவிகித இருக்கைகளுடன் தமிழக அரசு அனுமதி வழங்கியதால், பிரச்சாரத்திற்கான தடை நீங்கியது.
முதல்வர் பழனிசாமி நேற்று தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் பிரச்சாரத்தை துவங்கினார். மதுரையில் முதற்கட்ட பிரச்சாரத்தை முடித்த கமல்ஹாசன் இரண்டாவது கட்ட பிரச்சாரத்தை சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று தொடங்குகிறார். அதேபோல ஸ்டாலினும் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
read more: சொந்தத் தொகுதியில் பிரச்சாரம் துவங்கும் முதல்வர்!
சட்டமன்றத் தேர்தல் பணிகள் பற்றி ஆலோசிக்க திமுக தலைவர் ஸ்டாலின், அக்கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழகச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற பெயரில் திமுகவின் தேர்தல் பரப்புரை வீடியோ வெளியிடப்பட்டது.
அப்போது பேசிய திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், “திமுக ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் ஸ்டாலின் ஒரு போர்க்குரலை அறிவிக்கவுள்ளார். டிசம்பர் 23 ஆம் தேதி முதல் திமுக தலைவர் ஸ்டாலின், மக்களிடையே நேரடி பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். டிசம்பர் 23 முதல் முதல் ஜனவரி 10 வரை திமுக சார்பில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன” என்று தெரிவித்தார். இதன்மூலம் நேரடி பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளார் ஸ்டாலின்.