ரஜினிகாந்த், கமல்ஹாசன் கூட்டணி அமைத்தால் வாழ்த்துக்கள் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யத்தை ஆரம்பித்த கமல்ஹாசன், மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டார். வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தற்போது துவங்கிவிட்டார். இதேபோல சக நடிகரான ரஜினிகாந்த் அடுத்த மாதம் கட்சி ஆரம்பிக்கப்போவதாக தெரிவித்தார். கட்சி ஆரம்பிப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் தேர்தலுக்கு ரஜினியிடம் ஆதரவு கேட்பேன், மக்களுக்காக ஈகோ பார்க்காமல் ரஜினியுடன் இணைந்து பணியாற்றத் தயார் என அவ்வப்போது ரஜினியுடன் இணையும் ஆசையை கமல்ஹாசன் வெளிப்படுத்தி வருகிறார். இருவருக்கும் பின்னணியில் பாஜக இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால், தான் யாருக்கும் பி டீம் அல்ல, நேர்மைக்கு ஏ டீம் என விளக்கம் அளித்தார் கமல்ஹாசன்.
read more: பொங்கல் பரிசு தேர்தல் நேரத்து லஞ்சம் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் எதிர்ப்பு!
இந்த நிலையில் திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், ரஜினி, கமல் கூட்டணி அமைத்தால் வாழ்த்துக்கள். தேர்தலில் யார் யாருடன் இருக்கிறார்கள் என்று பார்ப்போம். பாஜகவில் தேர்தல் குறித்தும் கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும் எனத் தெரிவித்தார். வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நன்மைக்காகவே கொண்டுவரப்படுவதாகவும், விவசாயிகளை பற்றி பேச திமுகவுக்கு தகுதியில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
இடைதரகர்களை ஒழிக்கவேண்டும், விவசாயிகள் விரும்பும் தொகையை அவர்களுக்கு கிடைக்க ஏற்பாடுசெய்யவேண்டும். விவசாயம் செய்யும் முன்பே அவர்கள் பொருளுக்கான விலையை உருவாக்க திட்டங்கள் இந்த சட்டத்தின் மூலம் கொண்டு வரப்பட்டது என்றும் விளக்கமும் அளித்தார்.