எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியை துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் தனது அரசியல் கட்சியைத் துவக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது கட்சி ஆரம்பிப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும் நியமனம் செய்தார்.
அண்ணாத்தே படப்பிடிப்பில் இருக்கும் ரஜினி, டிசம்பர் 31ஆம் தேதி கட்சிப் பெயரை அறிவித்துவிட்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். அதன்பிறகு மீண்டும் பொங்கலுக்கு வரும் ரஜினி, கட்சியை ஆரம்பித்து பிரச்சாரப் பணிகளில் கவனம் செலுத்த இருக்கிறார். இந்த நிலையில் ரஜினி தனது கட்சியை எம்ஜிஆா் பிறந்த நாளான ஜனவரி 17ஆம் தேதி தொடங்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
தான் கட்சி ஆரம்பிக்கப்போவதாக அறிவித்த சில மாதங்களில், அதாவது 2018 மாா்ச் மாதம் சென்னையிலுள்ள எம்.ஜி.ஆா். நிகா்நிலை பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆரின் சிலையை ரஜினி திறந்து வைத்தார். அப்போது, எம்.ஜி.ஆரைப் போல் ஒருவா் ஒரு ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பிறக்க முடியாது. அவரே பிறந்து வந்தால்தான் உண்டு. எம்.ஜி.ஆா். போல ஆகப்போகிறேன் என்று சொன்னால், அதுபோன்ற பைத்தியக்காரத்தனம் இருக்க முடியாது. ஆனால், எம்.ஜி.ஆர். கொடுத்த நல்லாட்சி, ஏழை எளிய நடுத்தர மக்களுக்கான நல்லாட்சியை, என்னால் கொடுக்க முடியும் என நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.
read more: தமிழகத்திற்கு முன்கூட்டியே தேர்தல்: ஆணையம் செவிசாய்க்குமா?
இப்போது எம்.ஜி.ஆரை முன்வைத்து தமிழக அரசியல் மற்றும் பிரச்சாரக் களங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. அதாவது கமல்ஹாசன் தான் எம்.ஜி.ஆரின் நீட்சி என்று சொல்ல, அதிமுக நாளேடு எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் என இருவரும் எம்.ஜி.ஆரை முன்னிறுத்தி அரசியல் செய்வதற்கு பதில் அதிமுகவிலே இணைந்துகொள்ளலாம் என விமர்சித்திருந்தது. இந்த நிலையில் இவ்வாறான முடிவை ரஜினி எடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.




