80 வயத்துக்கு மேல் உள்ளவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் ஓட்டு வழங்குவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் கொரோனா அச்சம் காரணமாக 80 வயதுக்கும் மேற்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்குகள் அளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த திட்டத்தினால் முறைகேடுகள் நடக்கும் என ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் முறையிட்டிருந்தன.
ஆனால், 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தபால் வாக்கு அளிக்கும் முறையை அமல்படுத்த உள்ளதாக தேர்தல் ஆணையத்தின் தலைமைச் செயலாளர் உமேஷ் சின்ஹா நேற்று அறிவித்தார்.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. தபால் ஓட்டை பெறுவதற்காக வாக்குச்சாவடி அதிகாரி தான் நேரில் சென்று விண்ணப்பத்தை வாக்காளர்களிடம் வழங்க வேண்டும் என விதி உள்ளது. ஆகவே, அதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது. ஆகவே, தபால் வாக்கு முறையை திரும்பப் பெற்று, 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு தனி வாக்குச் சாவடி அமைக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
read more: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: கட்டுப்பாடுகள் என்னென்ன தெரியுமா?
இதனிடையே மாற்றுத் திறனாளிகளின் உரிமைக்காக போராடும் ‘டிசம்பர் 3’ இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தீபக், இந்த செயல்முறையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணா, ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வருகிறது.