‘குப்பைக் கொட்ட கட்டணம்’ என்ற அறிவிப்பை உடனே திரும்பப்பெற வேண்டும் என மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை :
வாழ்வாதாரத்தைத் தொலைத்த மக்களும்- பொருளாதார இழப்புகளைச் சந்தித்த சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் இன்னும் முறையாகவோ முழுமையாகவோ மூச்சு விடத் தொடங்கவில்லை. பல தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வரும் வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள், உணவகங்கள் அனைத்தும் இப்போதுதான் “மெல்ல மெல்ல” உயிரோட்டப் பாதைக்கு நகர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் குப்பைக் கட்டணத்தை அறிவித்திருப்பது, அ.தி.மு.க. அரசினர் மனம் குப்பை மேடாக மாறி விட்டதையே காட்டுகிறது. புத்தாண்டிலிருந்து வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த கட்டணம், சென்னை வாழ் குடும்பங்களிடமும், வணிகர்களிடமும், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் புரிவோரிடமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி நிலைகுலைய வைக்கும்
சென்னை மாநகர மக்களுக்கும் சிறு குறு நடுத்தர வியாபார நிறுவனங்களுக்கும்- திறந்த வழி பாட்டுத்தலங்களின் விழாக்களுக்கும் மற்றும் கொண்டாட்டங்களுக்கும் விரோதமான அ.தி.மு.க. அரசின் இந்த “குப்பை கொட்டக் கட்டணம்” என்ற அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற முதலமைச்சர் திரு. பழனிசாமி உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
Read more – அங்கீகரிக்கப்படாத லோன் செயலி மூலம் கடன் பெற வேண்டாம் – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
ஒரு வேளை முதலமைச்சரின் உத்தரவுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி கட்டுப்படா விட்டால், மக்களின் பேராதரவுடன் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தவுடன், இந்தக் குப்பை கொட்டக் கட்டணம் ரத்து செய்யப்படும்! சென்னை மாநகராட்சியின் நிதி முறைகேடு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, தவறு செய்தோர் யாராக இருந்தாலும் தக்கபடி தண்டிக்கப்படுவர் என்று எச்சரிக்க விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.