எம்.ஜி.ஆர் புகழை எதிரிகள் தட்டிப்பறிக்க விடமாட்டோம் என அவரது நினைவிடத்தில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றுள்ளனர்.

முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 33ஆவது நினைவு தினம் அதிமுகவினரால் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுக்க பல இடங்களில் அவரது உருவப்படத்தை அலங்கரித்து வைத்து மரியாதை செலுத்தி வருகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் தத்தமது வீட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் படங்களுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
அதன்பின்னர் பழனிசாமி, பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கறுப்பு உடையில் மெரினா கடற்கரையிலுள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்துக்குச் சென்றனர். அங்கு எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதன்பின்னர் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழியை வாசிக்க மற்றவர்கள் பின் தொடர்ந்தனர்.
தமிழ்நாட்டில் ஒரு குடும்ப ஆட்சி இருக்கக்கூடாது என்று, ஜனநாயகம் காப்பாற்றப்பட, புதிய எழுச்சி தந்தவர், எம்ஜிஆர் உருவாக்கிய உண்மையான ஜனநாயகத்தைக் காப்போம் என்றும், தமிழ்நாட்டில் உயரப் பறப்பது, அதிமுகவின் கொடியாகத் தான் இருக்க வேண்டும். தமிழக மக்களைக் காக்க, நீடித்து நிலைத்து நிற்பது, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சியாகத் தான் இருக்க வேண்டும். அதற்காக நம்மை அர்ப்பணிப்போம் என்றும் அதிமுகவினர் உறுதி மொழி ஏற்றனர்.
எம்ஜிஆர் மக்களோடு வாழ்ந்தார்; மக்களுக்காக வாழ்ந்தார். அவர் வழியிலே, ‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்று வாழ்ந்தார் ஜெயலலிதா. அதனால் தான், அந்த மனித தெய்வங்களுக்கு மக்கள் மகுடம் சூட்டினார்கள். அந்தப் புகழ் மகுடத்தை எதிரிகள் எவரும் தட்டிப் பறிக்க முடியாது; தட்டிப் பறிக்க, விசுவாசத் தொண்டர்கள் விடமாட்டோம் என்றும் கூறி உறுதி ஏற்றனர்.
read more: திமுகவில் பணியாற்ற வாய்ப்பில்லை: ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தும் அழகிரி
அரசியலுக்கு வந்துள்ள கமல்ஹாசன், வரவிருக்கும் ரஜினிகாந்த் ஆகியோர் எம்.ஜி.ஆரை தங்களுக்கான பிம்பமாக முன்னிறுத்துவதால் அவர்களை அதிமுக விமர்சித்து வருகிறது. தற்போது, இதன் காரணமாகவே எம்.ஜி.ஆரின் புகழை தட்டிப்பறிக்க முடியாது என அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றுள்ளனர்.




