அழகிரி உள்பட யார் கட்சி ஆரம்பித்தாலும் அது திமுகவின் வெற்றியை பாதிக்காது என திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவில் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்தவருமான மு.க.அழகிரி, கடந்த 2014ஆம் ஆண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு அவர் இன்னும் திமுகவில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. அதற்காக அவர் எடுத்த முயற்சிகளும் தோல்வியடைந்தன.
அழகிரி அமித் ஷாவை சந்தித்து பாஜகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளிவர, அதனை மறுத்தார். மதுரையில் கடந்த 1ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரியிடம், வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது பங்கு கண்டிப்பாக இருக்குமெனவும், புதிய கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக போகப் போகத் தெரியும் எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் வரும் ஜனவரி 3ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக அழகிரி தெரிவித்தார். ஆதரவாளர்கள் சொல்வது படி தனது முடிவு இருக்கும் என்ற அவர், அவர்கள் கட்சி ஆரம்பிக்கச் சொன்னால் கண்டிப்பாக ஆரம்பிப்பேன் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழியிடம், அழகிரி கட்சி ஆரம்பித்தால் அது திமுகவை பாதிக்குமா என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு கனிமொழியோ, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அழகிரி உட்பட யார் கட்சி ஆரம்பித்தாலும் அது திமுகவின் வெற்றியை பாதிக்காது. ஏனென்றால் அதிமுக ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என்பதில் பொதுமக்கள் உறுதியாக இருக்கிறார்கள் என பதிலளித்தார்.
read more: திமுகவின் கூட்டங்களுக்கு தடை: ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!
பலருடைய வியூகம் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதாகத்தான் இருப்பதாகக் குறிப்பிட்ட கனிமொழி, யார் கட்சி ஆரம்பித்தாலும் என்ன வியூகம் வகுத்தாலும் திமுகவின் வெற்றியை பறிக்க முடியாது என்றார். மேலும், ரஜினி, அழகிரி அல்ல வேறு யாராலும் திமுகவின் வாக்கு வங்கிக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியாது என்றும் விளக்கினார்.