மக்கள் பிரச்சினைக்காக போராடிவிட்டு பிறகு அரசியலுக்கு வர வேண்டுமென விஜய்க்கு சீமான் அறிவுறுத்தியுள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமானிடம், ரஜினி மற்றும் கமலின் அரசியல் வருகை தொடர்பாக கேள்வி முன்வைக்கப்பட்டது. ரஜினி, கமலுக்கு தேர்தலில் விழும் அடியில் இனி நடிகர்கள் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது. அது விஜய்யாக இருந்தாலும் சரி. நாட்டை ஆள்வதற்கான தகுதி நடிகர்களுக்கு உள்ளது என்பதற்கு முடிவுகட்ட வேண்டும் எனப் பேசினார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த விஜய் ரசிகர்கள் ஏற்கனவே விஜய்யை ஆதரித்து பேசியதையும், தற்போது சீமான் எதிர்ப்பு பேசுவதையும் போஸ்டராகவே தமிழகம் முழுக்க பல இடங்களில் ஒட்டினர்.
இந்த நிலையில் தமிழ் ஆய்வறிஞர் தொ.பரவசிவன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னையில் அவரது உருவப்படத்திற்கு சீமான் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.விஜய் ரசிகர்கள் கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது? அவர்களும் என் தம்பிகள்தான். ஆரம்பத்தில் இருந்து விஜய்யை எவ்வளவு தற்காத்து நின்ற அண்ணன் நான் என்பது அனைவருக்கும் தெரியும் என்று விவரித்தார்.
read more: எம்.ஜி.ஆரை உரிமை கோருபவர்கள் அவருக்கு என்ன செய்தார்கள்: பிரேமலதா
குறைந்தபட்சம் சூர்யா அளவுக்காவது விஜய் குரல் கொடுக்க வேண்டும். விஜய்யை அரசியலுக்கு வர வேண்டாம் என சொல்லவில்லை. களத்தில் நின்று மக்களுக்காக போராடி நன்மதிப்பைப் பெற்று அரசியலுக்கு வர வேண்டும் என்றுதான் சொல்கிறேன் என்றார். மேலும், மக்களுக்காக போராடி வரும் ஸ்டாலினுக்கு இல்லாத தகுதி, எடப்பாடி பழனிசாமி, திருமாவளவன், அன்புமணி ஆகியோருக்கு இல்லாத தகுதி ரஜினிக்கு உள்ளதா என்ற கேள்வியையும் அவர் முன்னிறுத்தினார்.