2021ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்பதை நிர்ணயம் செய்ய வேண்டுமென பாஜக நிர்வாகிகளுக்கு எல்.முருகன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற அதிமுகவின் பிரச்சார பொதுக் கூட்ட நிகழ்வில் பேசிய அக்கட்சி துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, சில கருங்காலிகள் திராவிட இயக்க ஆட்சியில் தமிழகத்தை சீரழித்துவிட்டதாக சொல்கிறார்கள். தற்போதைய சூழலைப் பயன்படுத்தி உள்ளே நுழைய முயற்சிக்கிறார்கள் என்றார்.
மேலும், அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை, தேவையுமில்லை. கூட்டணி அமைச்சரவை அமைக்கும் நினைப்பு யாருக்கும் வேண்டாம். அதிமுக தலைமையில்தான் கூட்டணி. எந்த தேசிய கட்சி இப்படி பேசி கூட்டணிக்கு வந்தாலும் அவர்கள் அதிமுகவுக்கு தேவையில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்த நிலையில் விழுப்புரத்தில் நடந்த பாஜக நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தமிழகத் தலைவர் எல்.முருகன் இதுபற்றி விளக்கம் அளித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள்தான் இருப்பதாகத் தெரிவித்தவர், இப்போது நமக்கு இருக்கும் ஒவ்வொரு நாளும் முக்கியமானது. ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட வேலைகளை 24 மணி நேரமும் செய்ய வேண்டும். ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று மோடி அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்ல வேண்டும் என்றார்.
read more: பாலியல் குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றம்: ஸ்டாலின் உறுதி!
பாஜக அமைப்பு ரீதியாக வளர்ந்து வருகிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று பாஜகவைச் சேர்ந்தவர்கள் சட்டமன்றத்தில் அமருவார்கள். அதுவரை அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும். வருங்காலம் என்பது பாஜகவின் காலமாக இருக்க வேண்டும். வரும் ஆட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி என்பதை நிர்ணயம் செய்வோம் என்று கே.பி.முனுசாமிக்கு பதிலளித்துள்ளார்.




