அதிகாரிகள் வழங்கும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசுத்தொகை வழங்கவேண்டும் என்றும், அவ்வாறு இல்லை என்றால் அந்த டோக்கன் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
பொங்கல் பண்டிகையை அடுத்து அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 2,500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.அதனைத்தொடர்ந்து வருகின்ற ஜனவரி 4 ம் தேதியிலிருந்து இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதிமுகவினர் மூலமாக டோக்கன் வழங்கப்பட்டு வருவதாக திமுக குற்றம்சாட்டியது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையிலான வழக்கறிஞர் குழு வழக்கு ஒன்றை தொடர்ந்தது. அதிமுகவினர் வழங்கும் அந்த டோக்கனில் முதல்வர் , துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்கள், ஆளுங்கட்சியின் தேர்தல் சின்னம் ஆகியவை இடம் பெற்று உள்ளதாகவும், இது தேர்தல் விதிமுறைக்கு அப்பாற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டது.
Read more – இன்றைய ராசிபலன் 31.12.2020!!!
இந்த நிலையில், இந்த அவசர வழக்கானது நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அனிதா சுமந்த் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகள் வாயிலாக டோக்கன்கள் வழங்கப்படுகின்றது. ஒரு சில அதிமுக வினர் ஆர்வமிகுதியால் டோக்கன் வழங்கியதாகவும், இனி மாவட்ட அதிகாரிகள் வழங்கும் டோக்கன்களுக்கு மட்டுமே பரிசுத்தொகை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு சுற்றறிக்கை வெளியிட திட்டமிட்டுள்ளது என தெரிவித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தமிழக அரசு வெளியிடும் அந்த சுற்றறிக்கையை இன்று மாலை 5 மணிக்குள் வெளியிட வேண்டும். அவ்வாறு அந்த அறிக்கை வெளியாகவில்லை என்றால் மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தை தொடர்பு கொள்ளலாம் என்று உத்தரவிட்டனர்.